காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசன விழா: "அன்னதான நிதி ரூ.25 லட்சம்" சென்னை மாநகராட்சி வழங்கியது


காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசன விழா: அன்னதான நிதி  ரூ.25 லட்சம் சென்னை மாநகராட்சி வழங்கியது
x
தினத்தந்தி 4 Aug 2019 3:00 AM IST (Updated: 4 Aug 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசன விழா அன்னதான நிதியாக ரூ.25 லட்சத்தை சென்னை மாநகராட்சி வழங்கியது.

காஞ்சீபுரம்,

புகழ்பெற்ற காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கடந்த 31-ந் தேதி வரை சயனகோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந்தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து செல்கின்றனர். நேற்று பக்தர்கள் 7 மணி நேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசித்தனர்.

மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் அத்திவரதரை தரிசிக்க வசதியாக தனிவரிசை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்காக சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காஞ்சீபுரத்திற்கு வருகின்றனர். இதனால் காஞ்சீபுரத்தில் உள்ள விடுதிகள் நிரம்பி காணப்படுகிறது. வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் பஸ்களில் இருந்து இறக்கி விடப்பட்டு சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்கின்றனர். ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பக்தர்கள் குற்றம் சாட்டினர்.

அத்திவரதரை நேற்று தமிழக அமைச்சர்கள் சி.வி. சண்முகம், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட பலர் தரிசித்தனர்.

காஞ்சீபுரத்தில் அத்திவரதர் தரிசனத்தை காணவரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நன்கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட ரூ.25 லட்சத்துக்கான காசோலையை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் வழங்கினார்.

அத்திவரதரை தரிசிக்க வரும் பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாக அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தை தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தினசரி சுமார் 2 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகம், மாட வீதிகளில் தரிசனத்துக்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு 120 பணியாளர்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக 5 இடங்களில் சவ்வூடு முறையில் சுத்திகரிக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ.46 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளன.

கோவில் வளாகம், மாட வீதிகள், தற்காலிக பஸ் நிலையங்கள், முக்கிய சாலைகள் உள்ளிட்ட இடங்களில் 350 தற்காலிக கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கழிப்பிடங்களுக்கு தேவையான தண்ணீர் அந்தந்த பகுதிளிலேயே எடுக்கும் வகையில் 10 புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் திடக்கழிவுகளை உடனுக்குடன் அகற்ற 1,200 துப்புரவு பணியாளர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். 108 ஆம்புலன்ஸ் (10 எண்ணிக்கையில்), 9 நடமாடும் மருத்துவ குழுக்கள், 10 இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் உள்ளன. முதியோர் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தனி வரிசை உள்ளது. இவர்களை அழைத்து செல்ல 1,250 இருசக்கர நாற்காலிகள், 12 பேட்டரி கார்கள் இயக்கப்படுகின்றன.

நகராட்சி எல்லைக்குள் சேதமடைந்த 10 கி.மீ. தூரமுள்ள சாலைகள் ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு பொதுமக்களின் போக்குவரத்து வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. 5 தற்காலிக பஸ் நிலையங்கள், 3 கார் மற்றும் வேன் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டு, அதில் அடிப்படை வசதி உள்ளிட்டவை ரூ.68.30 லட்சம் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, நிழற்கூடம் அமைப்புகளுடன் கூடிய 11 இருசக்கர வாகனம் நிறுத்தும் இடங்கள், ரூ.35 லட்சம் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கோவில் அருகே வரை செல்லும் வகையில் 45 சிறிய பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story