தங்கம் விலை ரூ.28 ஆயிரத்தை தாண்டியது ஓரிரு நாளில் ரூ.30 ஆயிரத்தை தொடும் என வியாபாரிகள் தகவல்
ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,896 அதிகரித்து, நேற்று ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்தை தாண்டியது. இன்னும் ஓரிரு நாட்களில் ரூ.30 ஆயிரத்தை தொடும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னை,
தங்கம் விலை கடந்த 2 மாதங்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் காரணமாக இந்த விலை உயர்வு கட்டுப்படுத்த முடியாமல் சென்று கொண்டு இருக்கிறது.
இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ‘ஜெட்’ வேகத்தில் உயர்ந்துள்ளது. கடந்த 1-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.3,310-க்கும், ஒரு பவுன் ரூ.26 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதற்கு மறுநாளே தங்கம் விலை பவுனுக்கு ரூ.584 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.27 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகும், தங்கம் விலை குறைந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் விலை அதிகரித்த வண்ணமே இருந்தது.
ரூ.28 ஆயிரத்தை தாண்டியது
இந்த நிலையில் தங்கம் விலை நேற்றும் அதிரடியாக உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3,473-க்கும், ஒரு பவுன் ரூ.27 ஆயிரத்து 784-க்கும் விற்பனை ஆனது.
நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.74-ம், பவுனுக்கு ரூ.592-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.3,547-க்கும், ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்து 376-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை பெருமளவில் உயர்ந்து இருக்கிறது. கிராமுக்கு ரூ.237-ம், பவுனுக்கு ரூ.1,896-ம் அதிகரித்துள்ளது.
வெள்ளி விலையும் உயர்வு
கடந்த 2 மாதங்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. ஜூன் மாதம் 19-ந் தேதியன்று ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது. அதன் பின்னர், ஜூன் 21-ந் தேதியே ஒரு பவுன் ரூ.26 ஆயிரத்தை தொட்டது. அதன்பிறகு விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில், கடந்த 2-ந் தேதி ரூ.27 ஆயிரத்தை கடந்து விற்பனை ஆனது.
தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் நேற்று உயர்ந்து இருந்தது. கிராமுக்கு ஒரு ரூபாய் 10 காசும், கிலோவுக்கு ரூ.1,100-ம் அதிகரித்து, ஒரு கிராம் 46 ரூபாய் 80 காசுக்கும், ஒரு கிலோ ரூ.46 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
உலக பொருளாதாரம் பாதிப்பு
தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருவதற்கான காரணம் குறித்து சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி கூறியதாவது:-
உலக பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. வேலைவாய்ப்பு, தொழில்துறை, உற்பத்தி ஆகியவற்றின் குறியீடு தொடர்ந்து சரிவை நோக்கி செல்கிறது. இதனால் பங்கு சந்தைகளில் முதலீடு செய்து வந்த முதலீட்டாளர்கள் அனைவரும் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர்.
இதன் காரணமாக அதன் விலை எகிறி வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்தை தொடுவதற்கான வாய்ப்பு உள்ளது. உலகிலேயே இந்தியாவில் தான் தங்கத்தின் இருப்பு அதிகம் இருக்கிறது. அதாவது, 25 ஆயிரம் டன் தங்கம் மக்களிடையே இருப்பு இருப்பதாக கணிக்கப்பட்டு இருக்கிறது. அந்தவகையில் பார்க்கும்போது, இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் மக்களின் முதலீடு லாபத்துடன் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story