அரசின் திட்டசெயல்பாடுகள் பற்றி கள ஆய்வறிக்கை அனுப்ப முதல் அமைச்சர் உத்தரவு


அரசின் திட்டசெயல்பாடுகள் பற்றி கள ஆய்வறிக்கை அனுப்ப முதல் அமைச்சர் உத்தரவு
x
தினத்தந்தி 8 Aug 2019 12:57 PM IST (Updated: 8 Aug 2019 12:57 PM IST)
t-max-icont-min-icon

அரசின் திட்டசெயல்பாடுகள் பற்றி கள ஆய்வறிக்கை அனுப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல் அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.

இதன்படி, முதலாம் நாளான இன்று 16 மாவட்ட ஆட்சியர்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். . இந்த ஆலோசனை கூட்டத்தில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர். மேலும், துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 

கூட்டத்தில், மாவட்டங்களில் அடிப்படை வசதிகள், குடிநீர் திட்ட பணிகள், அரசால் செயல்படுத்தப்படும் குடிமராமத்து பணிகள் போன்ற பல்வேறு பணிகள் குறித்து ஆட்சியர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. முன்னதாக, மழை நீரை சேகரித்து வளமான பூமியாக தமிழ்நாடு தொடர்ந்திட ஆதரவு அளிக்குமாறு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்தார்.

2வது நாளான நாளை வெள்ளிக்கிழமை 12 ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளதால், வேலூர் மாவட்ட ஆட்சியர் மட்டும் பங்கேற்கவில்லை.

ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்ற நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல் அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதன்படி, அரசின் திட்டங்கள் செயல்படும் விதம் குறித்து ஒவ்வொரு மாதமும் களஆய்வு செய்ய வேண்டும்.  இதன்பின் இதுபற்றிய ஆய்வறிக்கையை மாதந்தோறும் என்னுடைய அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Next Story