மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60 அடியை தாண்டியது


மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60 அடியை தாண்டியது
x
தினத்தந்தி 10 Aug 2019 5:02 PM IST (Updated: 10 Aug 2019 5:02 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 1 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்படுவதால் கரையோர மக்களுக்கு சேலம் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

சேலம்

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. 

இதன்காரணமாக கர்நாடகாவில் உள்ள முக்கிய நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மைசூர் மாவட்டத்தில் உள்ள 84 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் ஒரு லட்சத்து 25,000 கன அடி நீரும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் ஒகேனக்கல்லில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 40 ஆயிரம் கன அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 40  ஆயிரம் கன அடியில் இருந்து 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்து  உள்ளது. 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 54 அடியாக இருந்த நிலையில், ஒரேநாளில் இன்று காலை நிலவரப்படி  3 அடி உயர்ந்து  57.16 அடியாக இருந்தது.  கர்நாடக அணைகளில் இருந்து வரும் நீரின் அளவு அதிகரித்ததை தொடர்ந்து 120 அடி நீர்தேக்கும் உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60 அடியை தாண்டி  உள்ளது.

இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட்டு உள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மேட்டூர் அணைக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல், தண்ணீர் வர உள்ளது . அணைப் பகுதியில் உள்ள மக்கள், மேடான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார். மேட்டூர் அணை கரையோரம் மற்றும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ளவர்கள் நீரில் இறங்கி குளிக்க வேண்டாம் என கேட்டு கொண்டு உள்ளார்.

Next Story