திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தில் 2 புதிய மாவட்டங்கள் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தில் 2 புதிய மாவட்டங்கள் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Aug 2019 12:15 AM GMT (Updated: 15 Aug 2019 7:42 PM GMT)

சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

சென்னை,

தமிழ்நாட்டில் ஏற்கனவே 33 மாவட்டங்கள் இருந்தன.

மேலும் 2 புதிய மாவட்டங்கள்

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு தென்காசியை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டமும், காஞ்சீ புரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டமும் உருவாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 18-ந் தேதி சட்டசபையில் அறிவித்தார்.

இதனால் தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் புதிதாக மேலும் 2 மாவட்டங்கள் உருவாக்கப்படுவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிப்பு

சென்னை கோட்டையில் தமிழக அரசின் சார்பில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அவர் பேசுகையில், தற்போது பெரிய மாவட்டமாக உள்ள வேலூர் மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்று வந்த கோரிக்கைகளை பரிசீலித்து, நிர்வாக வசதிக்காக, வேலூரை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டமும், திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டமும், ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டமும் தோற்றுவிக்கப்படும் என்று கூறினார். அத்துடன், வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய வட்டம் ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.

புதிதாக 2 மாவட்டங்கள் உருவாக்கப்படுவதால், தமிழகத்தில் மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆக உயருகிறது.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் மேலும் கூறியதாவது:-

தியாகிகள் ஓய்வூதியம் உயர்வு

இங்கு தேசிய கொடியை தமிழ்நாட்டு மக்களின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக ஏற்றியதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். ஆங்கிலேயர்களை நம் மண்ணில் இருந்து அகற்றி, அடிமைத்தனத்தை தகர்த்தெறிய நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு மகத்தானதாகும்.

சுதந்திரத்துக்காக போராடியவர்களின் தியாகங்களை போற்றிடும் வகையிலும், தமிழ்நாடு அரசு இவர்களுக்கு 35 மணிமண்டபங்களையும், முக்கிய இடங்களில் திருவுருவச் சிலைகளையும் நிறுவியுள்ளதுடன், அரசு சார்பில் விழாக்களும் நடத்தி சிறப்பித்து வருகிறது.

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகச் செம்மல்களை சிறப்பிக்கும் வகையில், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.16 ஆயிரமாக உயர்த்தப்படும். சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் மற்றும் சிறப்பு ஓய்வூதியம் ரூ.7,500-ல் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

மழை நீர் சேமிப்பு

நாடு செழிக்க நன்னீர் அவசியம். மழை நீரை சேமிக்க வேண்டும். நீர் ஆதாரங்களை காக்க வேண்டும். இதன் மூலம், மனிதனின் அடிப்படைத் தேவையான குடிநீரை உறுதி செய்ய வேண்டும்.

இன்று மாநிலம் எதிர் கொண்டிருக்கும் முக்கிய சவால் இதுதான். இதற்கு மக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

கழிவு நீரை மறு சுழற்சி மூலமாக தொழிற்சாலைகளுக்கு வழங்கும் முறை 1993-ம் ஆண்டிலேயே செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோன்ற சுத்திகரிப்பு நிலையங்கள் கோயம்பேட்டிலும், கொடுங்கையூரிலும் நிறுவப்பட்டு, விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளன. மக்கள் பயன்படுத்திய நீரை சுத்திகரிப்பு செய்து, தொழிற்சாலைகளுக்கும், பிற பயன்பாட்டிற்கும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

மேலும், புதிய தொழிற்சாலைகள் அல்லது அடுக்குமாடிகள் கட்டுகின்றபோது, பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி மூலமாக மீண்டும் பயன்படுத்துவதற்கு சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்கினால்தான் அனுமதி வழங்கப்படும். இதனால் பெருமளவு நீர் சேமிக்கப்படும்.

ஆறுகள் இணைப்பு

கோதாவரி ஆற்றை காவிரியுடன் இணைக்கும் திட்டத்தை விரைவாக செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் விவசாயம் மற்றும் குடிநீர் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு ஏற்படும்.

காவிரி ஆற்றை சீரமைக்க, ‘நடந்தாய் வாழி காவிரி’ என்ற திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதே போன்று, பவானி, வைகை, அமராவதி, தாமிரபரணி ஆறுகளும் மாசுபடுவதை தடுக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

சேத்துப்பட்டு ஏரி, அத்திப்பட்டு ஏரி போன்ற தமிழ்நாடு முழுவதும் உள்ள பல முக்கிய ஏரிகளின் சுற்றுச்சூழலை பாது காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் உள்ள சதுப்புநிலங்களும், பெருங்குடி ஏரியும் இவ்வாறு பாதுகாக்கப்படும்.

இப்படி பல்வேறு கோணங்களில் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கைகள் எடுப்பதால் ஒரு துளி நீரைக் கூட வீணாக்கக் கூடாது என்பதில் அரசு மிகுந்த கவனத்துடன் செயலாற்றி வருகிறது. கடந்த 7-ந் தேதியன்று தொடங்கி வைக்கப்பட்ட தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கத்தின் மூலம் தமிழ்நாடு, நீர் வளம் மிக்க மாநிலமாக விரைவில் உருவாகும்.

இத்திட்டங்களின் மூலம், இனி வருங்காலத்தில் பருவமழை பொய்த்தாலும், தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்படும். எனவே இந்த இயக்கத்திற்கு மக்கள் தங்கள் ஒத்துழைப்பை பெருமளவு நல்க வேண்டும்.

இருமொழிக் கொள்கை

மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினை தீர்ப்பாயம் நடை முறைக்கு வந்தாலும்கூட, ஏற்கனவே உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவும் தொடர்ந்து செயல்படும்.

இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. தமிழ்நாட்டு மக்களை பாதிக்கக்கூடிய எந்த திட்டமாக இருந்தாலும், அரசு அதை எதிர்த்து, மக்கள் நலனை பாதுகாப்பதில் முன்னோடியாக விளங்கும்.

ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீடித்த வளர்ச்சி இலக்கு கள் 2030-ம் ஆண்டுக்குள் எய்தப்பட்டு, அதன் மூலம் தமிழ்நாடு உலக அரங்கில் வளர்ச்சிப்பாதையில் செல்ல அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகின்றது. பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டம், அதிக விவசாயிகள் பலன் பெறும் வகையில், இந்த ஆண்டு ரூ.634 கோடியே 74 லட்சம் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

விரைவில் அழுகும் வேளாண் பொருட்களை பாதுகாக்கும் வகையில், ஏற்கனவே 10 மாவட்டங்களில் 25 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்பட உள்ள வினியோகத் தொடர் மேலாண்மைத் திட்டம் மேலும் 5 மாவட்டங்களில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

தமிழ்நாடு நாள்

நிலத்தடி நீரை பாதுகாக்க இந்த ஆண்டு 10 கோடி ரூபாய் செலவில் 2.5 கோடி பனை விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன. வேலூரில் உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து, திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் புதிதாக உருவாக்கப்படும்.

தற்போது தமிழ்நாட்டின் சராசரி மின் தேவை 16 ஆயிரத்து 100 மெகா வாட்டாக இருந்தாலும், 18 ஆயிரத்து 300 மெகா வாட் நிறுவு திறனுடன் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது. சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 5 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. நடப்பு நிதியாண்டில் மேலும் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கி பொதுமக்களின் சேவைக்காக இயக்கப்படும்.

1956-ம் ஆண்டு நவம்பர் முதல் நாள், தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்டது. அதை பெருமைப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் முதல் நாள் “தமிழ்நாடு நாள்” என்ற பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது.

அத்திவரதர் தரிசனம்

காஞ்சீபுரத்தில் அத்திவரதர் எழுந்தருளியதை தரிசிக்க வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் சீரிய முறையில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சுமார் ஒரு கோடி பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து சென்று உள்ளனர்.

தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு முழுமையான கணக்கெடுப்பிற்கு பின், சிறப்பு நிதியுதவியாக குடும்பத்திற்கு தலா 2 ஆயிரம் ரூபாயை அரசு வழங்கும்.

பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கு தற்போதுள்ள முறைகளுடன், ஒரு சிறப்பு திட்டமாக, முதல்- அமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம், ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஒரு மாத காலத்திற்குள் மனுக் களுக்கு தீர்வு எட்டப்படும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Next Story