இன்று வருகை தரும் அனைத்து பக்தர்களும் அத்திவரதரை தரிசிக்க ஏற்பாடு - ஆட்சியர் பொன்னையா பேட்டி


இன்று வருகை தரும் அனைத்து பக்தர்களும் அத்திவரதரை தரிசிக்க ஏற்பாடு - ஆட்சியர் பொன்னையா பேட்டி
x
தினத்தந்தி 16 Aug 2019 10:13 AM GMT (Updated: 16 Aug 2019 10:13 AM GMT)

இன்று வருகை தரும் அனைத்து பக்தர்களும் அத்திவரதரை தரிசிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா கூறியுள்ளார்.

காஞ்சீபுரம்,

108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கடந்த மாதம் சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந் தேதி முதல் நின்றகோலத்தில் அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.

அத்திவரதர் தரிசனத்தையொட்டி காஞ்சீபுரம் நகரமே பக்தர்கள் கூட்டத்தால் திக்குமுக்காடியது. விடுதிகள் நிரம்பி காணப்பட்டது. வெளியூரில் இருந்த வந்த பக்தர்கள் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் அவதிக்கு உள்ளானார்கள். கடந்த 46 நாட்களாக நடைபெற்று வந்த அத்திவரதர் தரிசனம் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவு பெறுகிறது.

முக்கிய நபர்களுக்கான வரிசையில் நின்றோ, டோனர் பாஸ் மூலமாகவோ அத்திவரதரை தரிசிப்பது முற்றிலுமாக இன்று நிறுத்தப்பட்டு, பொது தரிசன வரிசையில் நின்று மட்டுமே தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

அத்திவரதர் தரிசனம் நிறைவுபெறுவதையடுத்து நாளை (சனிக்கிழமை) சிலை கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுகிறது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. நாளை (ஆக.,17) காலை துவங்கி அத்திவரதருக்கு 6 கால பூஜைகள் ஆகம விதிப்படி நடைபெற உள்ளது. அதன் பிறகு அத்திவரதரை மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்குள் கொண்டு செல்லும் பணிகள் நடைபெறும். நாளை மாலை அல்லது இரவு, அனந்தசரஸ் குளத்திற்குள் அத்திவரதர் கொண்டு செல்லப்படுவதால் நாளை பக்தர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது.

விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக  அத்திவரதர் கோவிலில் எதிர்பார்த்ததை விட பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்படுகிறது. குறைந்தது 3 முதல் 4 மணிநேரத்தில் தரிசனம் செய்வதாக பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனால் இதுவரை அத்திவரதரை தரிசிக்காதவர்கள் இன்று சென்று தரிசனம் செய்யலாம். அனந்தசரஸ் குளத்திற்குள் நாளை செல்லும் அத்திவரதர், மீண்டும் 2059 ம் ஆண்டே திருக்குளத்தில் இருந்து வெளிப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

"அத்திவரதர் உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட சூப்பர் ஸ்டாராகி விட்டார்" என்று நடிகர் விவேக் கூறியுள்ளார். 

இந்நிலையில்  தந்தி டிவிக்கு காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அளித்த பேட்டியில்,

இன்று வருகை தரும் அனைத்து பக்தர்களும் அத்திவரதரை தரிசிக்க ஏற்பாடு செய்யப்படும். பக்தர்களின் வருகையை பொறுத்தே நடை சாத்தப்படும்.  நாளை மாலை அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் வைக்கப்படுவார். அனைத்து துறையினரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.  அத்திவரதரை இதுவரை ஒரு கோடியே 4 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story