“வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் கவனம் செலுத்துங்கள்” தொண்டர்களுக்கு, எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்


“வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் கவனம் செலுத்துங்கள்” தொண்டர்களுக்கு, எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
x
தினத்தந்தி 5 Sept 2019 4:45 AM IST (Updated: 5 Sept 2019 3:57 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணிகளில் தொண்டர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி- ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

புகைப்பட வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் செய்யும் வகையில் இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்காளர் சரிபார்க்கும் புதிய நடைமுறையை உருவாக்கி உள்ளது.

இந்த பணி கடந்த 1-ந் தேதி தொடங்கப்பட்டு வருகிற 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த காலக்கட்டத்தில் வழங்கப்படும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர், அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் பொது சேவை மையங்கள், அரசு கேபிள் டி.வி.யின் இ-சேவை மையங்கள், வாக்காளர் உதவி மையங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் அதிகாரிகள் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்கள் முதலானவற்றில், வாக்காளர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம்.

மேலும், வாக்காளர்கள் தாங்களே, தேர்தல் ஆணையத்தின் என்.வி.எஸ்.பி. போர்ட்டல் மற்றும் கைபேசி செயலி மூலம், பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.

அந்த வகையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கழகத்தின் பல்வேறு நிலைகளில் செயல்பட்டு வரும் அனைத்து நிர்வாகிகளும், கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகளும், அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கென்று நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களும், தொண்டர்களும் தனிக்கவனம் செலுத்தி, 30-ந் தேதி வரை நடைபெற உள்ள வாக்காளர் சரிபார்த்தல் பணிகளில், ஒவ்வொருவரும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story