பாசமிகு சகோதரி’ என்பதே எனக்கு பிடித்த பட்டம்: ‘நான் எப்போதுமே உங்கள் வீட்டு பிள்ளை’ தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
‘நான் எப்போதுமே உங்கள் வீட்டு பிள்ளை’ என்றும், ‘பாசமிகு சகோதரி என்பதே எனக்கு பிடித்த பட்டம்’ என்றும் சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
சென்னை,
சென்னை சிட்டிசன்ஸ் போரம் மற்றும் தமிழகம் ரிசர்ச் பவுண்டேஷன் சார்பில் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டு இருக்கும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாராட்டு விழா, சென்னையில் நேற்று மாலை நடந்தது. இந்த விழாவில் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
என்னை ‘மேதகு’ என்று அழைக்க தொடங்குகிறார்கள். ‘மேதகு’ என்பதை விட ‘பாசமிகு சகோதரி’ என்று அழைக்கப்படுவதையே நான் விரும்புகிறேன். அதுவே எனக்கு பிடித்த பட்டமாக கருதுகிறேன். நான் பெரிய சாதனையை செய்யவில்லை. சேலை, ஜிமிக்கி, வளையலுக்கு ஆசைப்படும் சாதாரண பெண் நான். எனக்கு கொடுத்த வேலையை நான் சரியாக செய்தேன்.
ஒவ்வொரு வினாடியையும் நான் மகிழ்ச்சியாகவே கடந்து வருகிறேன். ஆனால் என்னை கஷ்டப்படுத்த நினைக்கும் ‘மீம்ஸ் கிரியேட்டர்கள்’ தான் தினமும் தோற்று வருகிறார்கள். எனது கடமை பணி செய்வதே. எனவே தான் எந்த விமர்சனங்களும் என்னை ஒருபோதும் தாக்கியதில்லை. நானும் சோர்ந்து போனதில்லை.
அரசியல் என்பது சாதாரண விஷயமல்ல. என் அப்பா (குமரி அனந்தன்) என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார். அப்படிப்பட்ட அப்பாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்து பொதுப்பணியில் ஈடுபடுவது சாதாரண விஷயமல்ல, மிகப்பெரிய சவால். ரணப்பட்டு போயிருக்கிறேன். அவர் காங்கிரஸ்காரர். நான் பா.ஜ.க. தொண்டர். அவரது பிறந்தநாள் விழாவில் கூட என்னால் சேரமுடியாது. ஆனால் அந்த ரணப்பட்ட வாழ்க்கைக்கு எனது உயர்வு (கவர்னர் பதவி) மருந்தாக மாறியிருக்கிறது. இது மகிழ்ச்சி.
ஒவ்வொருவருக்கும் அவர்களது வீட்டு வாசலிலேயே மகிழ்ச்சி காத்திருக்கிறது. இயற்கையை ரசியுங்கள், பயணத்தை ரசியுங்கள். காண்பவை அனைத்தையும் ரசியுங்கள். மகிழ்ச்சி தானாக கிடைக்கும். தானும் மகிழ்ந்து பிறரை மகிழ்வித்து வாழ்வது பெரிய விஷயம். அதை பின்பற்றுங்கள்.
‘கண்டதை படித்தால் பண்டிதர் ஆகலாம்’ என்று என் தந்தை சொல்வார். ஆனால் ‘கண்டதை படித்தால் கவர்னர் கூட ஆகலாம்’ என்று எனக்கு இப்போது தெரிந்துள்ளது. என் வாழ்க்கையில் ஏற்பட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுத்தது, புத்தகம். மனது பாரமாக இருக்கும்போது புத்தகம் படிப்பேன்.
தற்கொலை செய்து கொள்பவர்களை எண்ணி வேதனை படுகிறேன். எதற்காகவும் விரக்தி அடையக்கூடாது. வாழும் காலத்தில் அனைத்தையும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள். மீண்டும் சொல்கிறேன், நான் கவர்னர் அல்ல, எப்போதும் உங்கள் வீட்டு பிள்ளை.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story