ப.சிதம்பரம் கைதுக்கு பிறகு மு.க.ஸ்டாலினின் குரல் மென்மையாகி விட்டது -அமைச்சர் ஜெயக்குமார்


ப.சிதம்பரம் கைதுக்கு பிறகு மு.க.ஸ்டாலினின் குரல் மென்மையாகி விட்டது -அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 5 Sept 2019 2:10 PM IST (Updated: 5 Sept 2019 2:56 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் கைதுக்கு பிறகு மு.க.ஸ்டாலினின் குரல் மென்மையாகி விட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை

விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சி.யின் 148 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. நாட்டின் விடுதலைக்காக போராடி, சிறையில் செக்கிழுத்ததால், செக்கிழுத்த செம்மல் என்றும் வ.உ.சி, போற்றப்படுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை துறைமுகத்தில் உள்ள வ.உ.சி. திருவுருவச் சிலைக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்டோர்  மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தில் தமிழக மக்களுக்கான பொது விநியோகத் திட்டத்தில் எவ்வித பாதிப்பும் இருக்காது.  உலக பொருளாதார மந்தநிலையால், சீனா போன்ற நாடுகளிலிருந்து பல அமெரிக்க நிறுவனங்கள் வெளியேறும் தருவாயில், அந்நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யும் வகையில் ஈர்ப்பதற்காகவே முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்று உள்ளனர் என கூறினார்.

ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தில் தமிழகம் இணைவதற்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ப.சிதம்பரம் கைதுக்கு பிறகு மு.க.ஸ்டாலினின் குரல் மென்மையாகி விட்டது என்றும், அவர் மத்திய அரசைக் கடுமையாக எதிர்ப்பதில்லை என்றும் ஜெயக்குமார் கூறினார்.

Next Story