தமிழகத்தில் ‘ஆன்லைன்’ மூலம் சினிமா டிக்கெட் விற்பனை: திரையுலகினருடன் அமைச்சர் ஆலோசனை கட்டணத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை


தமிழகத்தில் ‘ஆன்லைன்’ மூலம் சினிமா டிக்கெட் விற்பனை: திரையுலகினருடன் அமைச்சர் ஆலோசனை கட்டணத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை
x
தினத்தந்தி 7 Sept 2019 4:30 AM IST (Updated: 7 Sept 2019 3:05 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் விற்பனை செய்வது குறித்து திரைப்பட துறையினருடன் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆலோசனை நடத்தினார்.

சென்னை,

தமிழகத்தில் சினிமா டிக்கெட் விற்பனையில் இதுவரை ஒருங்கிணைந்த நடைமுறை இல்லை. தியேட்டர்களில் எத்தனை டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டன?, எத்தனை டிக்கெட்கள் ஆன்லைனில் விற்பனை ஆகின்றன?, அவற்றின் விலையைக் கட்டுப்படுத்த விதிகள் உள்ளதா? என்பதெல்லாம் கேள்வியாக இருந்து வந்தது.

எனவே, இதுபோன்ற நிலையை ஒழுங்குபடுத்துவதற்காக செயலி ஒன்றை அரசே உருவாக்கவும் சினிமா டிக்கெட் விற்பனையை அதன் மூலமாகவே செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது.

இதுபற்றிய அறிவிப்பை சமீபத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வெளியிட்டார்.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நேற்று திரையுலக பிரமுகர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர், திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்ததும் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வைத்த பல்வேறு கோரிக்கைகளை அரசின் சார்பாக ஏற்கனவே நாங்கள் நிறைவேற்றி கொடுத்திருக்கிறோம். திரையரங்கு டிக்கெட் கட்டணத்தை ஆன்லைன் மூலமாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்று அரசு எண்ணிய நேரத்தில் பல்வேறு தரப்புகளிலிருந்து ஆதரவான கருத்துகளை தெரிவித்தார்கள்.

இதை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்காக திரையரங்கு உரிமையாளர் சங்க பிரதிநிதிகள், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பிரதிநிதிகள், திரைத்துறையைச் சேர்ந்த இயக்குனர் பாரதிராஜா, சுரேஷ் காமாட்சி, உள்துறைச் செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர், அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தி, அனைவரின் கருத்துக்களை கேட்டு, அதில் அரசு சார்பாக தெரிவிக்கப்பட்ட கருத்துகளை அவர்கள் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்கள். ஒரு வார காலத்திற்குள், ஒரு இறுதி வடிவத்துடன் மீண்டும் கலந்தாய்வு கூட்டம் நடத்தி நடைமுறைப்படுத்தும் பணியை அரசு தொடங்கும்.

இதில் நடைமுறைச் சிக்கல் இருப்பதாக யாரும் சொல்லவில்லை, பல்வேறு தரப்பில், ஆலோசனைகளை சொல்லி இருக்கிறார்கள். ரெயில், பேருந்து டிக்கெட்டுக்களுக்கு ஆன்லைன் வசதி உபயோகிக்கின்ற பழக்கத்திற்கு மக்கள் வந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 977 திரையரங்குகளிலும் ஒரு நாள் ஓடக்கூடிய காட்சிகள் எத்தனை, விற்பனையாகக்கூடிய டிக்கெட்டுகள் எத்தனை என்ற விவரத்தை அறிந்து கொள்ளும் விதமாக, முதன்முறையாக, முன்மாதிரியாக தமிழகத்தில் நடைமுறைப்படுத்தவிருக்கிறோம். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். இதில் சிக்கல் இல்லை.

திரையரங்கு உரிமையாளர்கள் டிக்கெட் விற்பனை விவரத்தின் சரியான கணக்கை அரசுக்கு தெரியப்படுத்தாத காரணத்தினால்தான் அரசு இதுபோன்ற முடிவிற்கு வருகிறதா? என்று கருத வேண்டியதில்லை. காலத்திற்கு ஏற்றாற்போல், இருக்கும் இடத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம் என்பதற்காக அரசு இந்த முடிவெடுத்துள்ளதே தவிர, எந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலும் இல்லை.

இதை படிப்படியாக நிறைவேற்றும்பொழுது, கணினி மூலமாக ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்யக்கூடிய வாய்ப்பும் உருவாக்கப்படும்.

மக்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் எளிதில் நடைமுறைப்படுத்தக்கூடிய வழியைத்தான் நாங்கள் ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். ஆன்லைனில் மட்டுமல்லாமல், திரையரங்குகளிலும் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டில்தான் அரசு உள்ளது.

அரசே உருவாக்கும்பட்சத்தில் சேவை கட்டணம் குறைவாக இருக்குமா? என்பது பற்றி நிச்சயமாக உரிமையாளர்களை அழைத்து பேசுவோம். அதிக கட்டணம் இருக்கிறது என்ற காரணத்தினால்தான் இந்த முன்மொழிவை அரசு அறிவித்திருக்கிறது. அரசு விதிக்கின்ற கட்டணத்திற்கு நிச்சயமாக கட்டுப்பட்டு ஒத்துழைப்பு தருவார்கள்.

திரையரங்குகளில் விற்பனை செய்யக்கூடிய உணவுப் பொருட்களின் விலையும் அதிகமாக உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. அதுகுறித்தும் ஆலோசித்துள்ளோம். விரைவில் அடுத்த கூட்டத்தில் இதற்கும் தீர்வுகாண ஆலோசிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

சினிமா இயக்குனர் பாரதிராஜா பேட்டி அளித்தபோது, “டிக்கெட் விற்பனை தொடர்பாக சமீபத்தில் அமைச்சர் அறிவித்த நவீன சிந்தனைக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பாகவும், திரையரங்கு உரிமையாளர்கள் சார்பாகவும் அரசுக்கு நன்றி சொல்ல வந்தோம். இந்த நேரத்தில் எங்களிடம் சில ஆலோசனைகளை அமைச்சர் கேட்டிருக்கிறார். தமிழகத்தில் எத்தனை டிக்கெட் விற்பனை ஆகியுள்ளது?எத்தனை பேர் ஒரு நாளில் படம் பார்த்தார்கள்? என்பதையெல்லாம் கணக்கிடுவதற்காகவும் ஒருவரை ஒருவர் குறை கூறாதபடியும் நடைமுறை மாற்றப்படும். ஒளிவு மறைவில்லாத வியாபாரமாக இருக்க வழிமுறை செய்யப்பட்டுள்ளது. இன்னும் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன” என்று குறிப்பிட்டார்.

திரையரங்கு உரிமையாளர் அபிராமி ராமநாதன் கூறியதாவது:-

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்திருப்பதற்கு அரசுக்கும், அமைச்சருக்கும் நன்றி. நாங்கள் மேலும் கலந்தாலோசிப்போம்.

பொதுமக்கள் இப்போது தியேட்டரை விட்டுச் செல்கிறார்கள். அவர்கள் இல்லாமல் சினிமா மற்றும் தியேட்டர்கள் இல்லை. எனவே அவர்கள் மீண்டும் தியேட்டர்களுக்கு வரும் அளவுக்கு நிலை மாறும். டிக்கெட் விற்பனை தொடர்பாக மக்கள் வைத்துள்ள கோரிக்கைகள் நியாயமானவை.

தற்போது ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால் ஒரே குடும்பத்தினராக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக முன்பதிவு (புக்கிங்) கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இனி ஒரு குடும்பத்தினருக்கு ஒருமுறை டிக்கெட் முன்பதிவு செய்தால், அனைவருக்கும் ஒரே முன் பதிவு கட்டணம் மட்டுமே வசூலிக்கும் அளவுக்கு மாற்றம் கொண்டுவர உள்ளோம். எனவே, ஆன்லைன் டிக்கெட் விற்பனையாளர்களையும் அடுத்த கூட்டங்களில் அழைத்து பேசுவோம்”. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story