விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: தீபாவளி பரிசுப்பொருட்களை உரிய ஆவணங்களுடன் எடுத்து செல்ல வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்


விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: தீபாவளி பரிசுப்பொருட்களை உரிய ஆவணங்களுடன் எடுத்து செல்ல வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 23 Sep 2019 11:45 PM GMT (Updated: 23 Sep 2019 9:51 PM GMT)

இடைத்தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகள் உள்ள மாவட்டங்களில் தீபாவளி பரிசுப்பொருட்களை உரிய ஆவணங்களுடன் எடுத்து செல்ல வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் சத்யபிரத சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

தேர்தல் தொடர்பாக விழுப்புரம் மற்றும் நெல்லை மாவட்ட கலெக்டர்களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டு உள்ளன. தீபாவளி பண்டிகை அக்டோபர் 27-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. எனவே அந்த காலகட்டத்தில் பரிசு பொருட்கள், பணம் போன்றவற்றை கொண்டு செல்வார்கள்.

எப்படி என்றாலும், தேர்தல் நடத்தை விதிப்படி அவற்றுக்கு ஆதாரமான உரிய ஆவணங்களுடன் கொண்டு செல்ல வேண்டும். இல்லையென்றால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.

தேர்தல் நடத்தை விதிப்படி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் மற்றும் பொருட்களை உரிய ஆவணங்களுடன் கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிட்டால், தேர்தல் நடத்தை விதிகளின்படி அவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும்.

செலவின பார்வையாளர்கள், துணை ராணுவப்படையினர் தொகுதிக்கு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 2 தொகுதிகளிலும் தலா 3 பறக்கும் படையினரும், 3 கண்காணிப்பு குழுவினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.

தேர்தல் நடக்கும் அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட மற்ற பகுதியில் தலா ஒரு பறக்கும் படையும், நிலைக்குழுவும் கண்காணிப்பில் ஈடுபடும்.

விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 21-ந் தேதி நிலவரப்படி 2,23,456 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1,11,721 பேரும், பெண்கள் 1,11,710 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 25 பேரும் உள்ளனர். அங்குள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் எண்ணிக்கை 3,286. அவர்களில் 2,066 ஆண்கள், 1,220 பெண்கள்.

நாங்குநேரி தொகுதியில் உள்ள 2,57,042 வாக்காளர்களில் ஆண்கள் 1,27,341 பேர், பெண்கள் 1,29,698 பேர், மூன்றாம் பாலினத்தவர் 3 பேர். மேலும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் எண்ணிக்கை 1,475. அவர்களில் 887 பேர் ஆண்கள், 588 பேர் பெண்கள்.

இந்த இடைத்தேர்தலுக்காக விக்கிரவாண்டியில் 139 இடங்களில் 275 வாக்குச்சாவடிகளும், நாங்குநேரியில் 170 இடங்களில் 299 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story