மோடியை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கேட்பதா? தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்


மோடியை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கேட்பதா? தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்
x
தினத்தந்தி 3 Oct 2019 5:15 AM IST (Updated: 3 Oct 2019 2:50 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கேட்பதா? என்று தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்திபவனில் மகாத்மா காந்தி பிறந்தநாள், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பெருந்தலைவர் காமராஜர் நினைவுதினமும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி காந்தி, லால் பகதூர் சாஸ்திரி, காமராஜர் ஆகியோரின் உருவப்படங்கள் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

இந்த தலைவர்களின் உருவப்படங்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், தேசிய செயலாளர் சிரிவல்ல பிரசாத், முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, எஸ்.சி.பிரிவு மாநில அமைப்பாளர் பி.வி.தமிழ்ச்செல்வன், மாவட்டத் தலைவர் சிவராஜசேகரன், செய்தித் தொடர்பாளர் ஆ.கோபண்ணா உள்பட நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

காந்தியின் பிறந்தநாளையொட்டி காங்கிரசார் சார்பில் மாவட்டந்தோறும் காந்தி புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி சென்னை சத்தியமூர்த்திபவனில் காந்தியின் 100 அரிய புகைப்படங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியை கே.எஸ். அழகிரி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது அவரிடம், ‘பிரதமர் நரேந்திர மோடி-சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரை வரவேற்று பேனர் வைக்க தமிழக அரசு அனுமதி கேட்டுள்ளதே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு கே.எஸ்.அழகிரி பதிலளித்து கூறும்போது, ‘வரவேற்பு அளிக்க பல வழிமுறைகள் இருக்கின்றன. பத்திரிகை, தொலைக்காட்சிகளில் விளம்பரம் கொடுத்து வரவேற்கலாம். தனியார் சுவர்களை பயன்படுத்தலாம். பல உயிர் பலிக்கு காரணமான பேனர் கலாசாரத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு தமிழக அரசே அனுமதி கேட்பது கண்டனத்துக்குரியது’ என்றார்.

இதைத்தொடர்ந்து காந்தியின் பிறந்தநாள் விழா கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காந்தி, காமராஜர், லால் பகதூர் சாஸ்திரி ஆகியோருக்கு கே.எஸ்.அழகிரி புகழாரம் செலுத்தி பேசினார். அப்போது அவர் பேசும்போது, ‘நம்முடைய (காங்கிரசார்) சக்தி, வலிமை, பெருமையை மக்கள் மனதில் பதிய வைத்து, அசைக்க முடியாத நம்பிக்கையை பெற வேண்டும். அப்போது தான் காங்கிரஸ் புத்துணர்ச்சி பெறும். எனவே அனைவரும் மன உறுதியுடன் செயல்பட வேண்டும்’ என்றார்.

இந்த கூட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு காந்தியின் சத்திய சோதனை புத்தகத்தை கே.எஸ்.அழகிரி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா, எஸ்.சி.பிரிவு தலைவர் கு.செல்வப்பெருந்தகை, மாவட்டத் தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார், தொகுதி தலைவர் முகப்பேர் பிரபாகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

காந்தியின் வாழ்க்கை வரலாறு குறித்த குறும்படமும் சத்தியமூர்த்திபவனில் நேற்று ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Next Story