சீன அதிபர் சென்னை விமான நிலையத்திற்கு வரும்போது விமானங்கள் பறக்க தடை


சீன அதிபர் சென்னை விமான நிலையத்திற்கு வரும்போது விமானங்கள் பறக்க தடை
x
தினத்தந்தி 6 Oct 2019 7:10 PM IST (Updated: 6 Oct 2019 7:10 PM IST)
t-max-icont-min-icon

சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை விமான நிலையத்திற்கு வரும்போது விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடி மற்றும்  சீன அதிபர் ஜி ஜின்பிங், சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு அக்டோபர் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. 

இரு நாட்டு தலைவர்களின் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள புராதன மையங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தார் சாலைகள் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்பட்டு வருகின்றன. சுகாதாரம், குடிநீர், மின்விளக்கு வசதிகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். மத்திய தொல்லியல் துறையும் பாரம்பரிய சின்ன மையங்களில் அழகிய புல்வெளிகளை அமைத்துள்ளன. சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி சென்னை விமான நிலையம் மற்றும் அவர் வாகனம் செல்லும் பாதை, மாமல்லபுரம் ஆகிய இடங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதையில் சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் வகையில் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவரது விமானம் வந்து இறங்கும் நேரத்திலும், கலை நிழ்ச்சிகள் நடக்கும் நேரத்திலும் மற்ற பயணிகள் விமானங்கள், சரக்கு விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் விமானங்கள் அனைத்துக்கும் நேர பட்டியலை மாற்றி அமைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. சீன அதிபர் பயணிக்கும் வாகனம் வெளியே செல்ல பயன்படுத்தப்படும் 5-வது மற்றும் 6-வது நுழைவுவாயில் பகுதி சுத்தம் செய்யப்பட்டு வண்ணம் தீட்டப்படுகிறது.

இதனையடுத்து, சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை விமான நிலையத்திற்கு வரும்போது வான்பரப்பில் பிற விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Next Story