நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் சஞ்சய் தத் நம்பிக்கை


நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில்  தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் சஞ்சய் தத் நம்பிக்கை
x
தினத்தந்தி 7 Oct 2019 4:14 AM IST (Updated: 7 Oct 2019 4:14 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று சஞ்சய் தத் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

சென்னை,

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சஞ்சய் தத் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியா பெரும் பொருளாதார மந்த நிலையை சந்தித்து வருகிறது. அதனை சரி செய்ய மத்திய பா.ஜனதா அரசு எந்த ஒரு திட்டமும் வகுக்கவில்லை. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு வருகிறார். அதேபோல் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் முதலீடுகளை ஈர்க்கிறேன் என்ற பெயரில் 15 நாட்கள் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று வந்துள்ளார்.

தமிழகத்தில் 89 லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கு அ.தி.மு.க. அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமர் மோடிக்கு எதிராகவோ, மத்திய அரசுக்கு எதிராகவோ கருத்து தெரிவித்தால், அவர்கள் சிறைக்கு அனுப்பப்படும் செயல் நடைபெற்று வருகி றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.யில் பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சியை நேரலை செய்யவில்லை என்பதற்காக தூர்தர்ஷன் நிறுவனத்தின் உயர் அதிகாரி வசுமதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது கண்டிக்கத்தக்கது. பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் இந்திக்காக இளைஞர்கள் போராட வேண்டும் என்று கூறியிருப்பதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்தி எதிர்ப்பில் உறுதியாக இருக்கும் தமிழக மக்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவாக இருக்கும்.

அ.தி.மு.க. அரசு பா.ஜனதாவின் கைப்பாவையாக செயல்படுகிறது. மோடியும், அமித்ஷாவும் ஆட்டுவிப்பதற்கு ஏற்ப எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஆடிக்கொண்டு இருக்கின்றனர். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் அமோக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து, காந்தியின் பிறந்தநாளையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தொடங்கி வைக்கப்பட்ட காந்தியின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புகைப்பட கண்காட்சியை சஞ்சய் தத் பார்வையிட்டார். அவருடன் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா, மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story