மாநில செய்திகள்

மழையில் நனைந்து துர்நாற்றம் வீசுகிறது: முதல்-அமைச்சர் வீட்டுக்கு அருகே மலைபோல் குவிந்துள்ள குப்பைகள் ஐகோர்ட்டு கண்டனம் + "||" + Near the Chief-Minister Home Accumulated debris Condemned High court

மழையில் நனைந்து துர்நாற்றம் வீசுகிறது: முதல்-அமைச்சர் வீட்டுக்கு அருகே மலைபோல் குவிந்துள்ள குப்பைகள் ஐகோர்ட்டு கண்டனம்

மழையில் நனைந்து துர்நாற்றம் வீசுகிறது: முதல்-அமைச்சர் வீட்டுக்கு அருகே மலைபோல் குவிந்துள்ள குப்பைகள் ஐகோர்ட்டு கண்டனம்
முதல்-அமைச்சர் வீட்டுக்கு அருகே பல மாதங்களாக மலைபோல் குப்பைகள் குவிந்து கிடப்பதாகவும், மழையில் நனைந்து அவை துர்நாற்றம் வீசுவதாகவும் சென்னை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை,

நோயாளியை சரிவர கவனிக்காத அரசு டாக்டர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் டாக்டர்கள் திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதை எதிர்த்து குமரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


அதுபோல முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையில் தங்களது உரிமைகள் பாதிக்கப்படுவதாக கூறியும் அந்த ஆண்டில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை எதிர்த்து வக்கீல் ஏ.கே.வேலன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தற்போது ஊதிய உயர்வு கேட்டு டாக்டர்கள் நடத்தும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசுக்கு உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘ராணுவத்தினர், போலீசார் எல்லாம் இதுபோல வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் நாடு என்னவாகும்? டாக்டர் கள் உயிரை காப்பாற்றுபவர்கள், கடவுளுக்கு அடுத்தபடியாக அவர்களை மக்கள் பார்க்கின்றனர். அவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க மாட்டேன் என்று கூறி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடலாமா?’ என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

பின்னர், அரசு ஊழியர்களின் பேராட்டத்தை தடுக்கும் ‘டெஸ்மா’ சட்டம் என்ன ஆனது? என்று அரசு தரப்பிடம் நீதிபதிகள் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், ‘அது அவசரச்சட்டம். தற்போது அந்த சட்டம் காலாவதியாகி விட்டது. இதுகுறித்து அரசிடம் தெளிவாக விளக்கத்தை பெற்று கூறுகிறேன். அதேநேரம், நிபந்தனையின்றி டாக்டர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்று விட்டனர். அவர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தும்’ என்று கூறினார்.

அப்போது மனுதாரர் சூரிய பிரகாசம், ‘தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது’ என்றார்.

அதற்கு நீதிபதிகள், ‘சுகாதாரம் குறித்து மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படவேண்டும். சாலை எல்லாம் குப்பை கூளங்களாக காட்சியளிக்கின்றன. ஏன், முதல்-அமைச்சர் வீட்டுக்கு அருகே கூட மலைபோல குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. நாங்களும் அப்பகுதியில் தான் இருக்கிறோம். மாதக்கணக்கில் அந்த குப்பை அள்ளப்படாமல் கிடக்கிறது’ என்று கண்டனம் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறுகையில், ‘ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோது அவர் வசித்த பகுதியில் மட்டுமல்ல, அவர் செல்லும் சாலைகள் எல்லாம் சுத்தமாக பராமரிக்கப்பட்டன. ஆனால், தற்போதைய முதல்-அமைச்சர் வீட்டுக்கு அருகிலேயே குப்பைகள் மலைபோல் உள்ளது. மழையில் நனைந்து துர்நாற்றம் வீசுகிறது. அதை கூட அதிகாரிகள் அகற்றாமல் உள்ளனர்’ என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல், ‘மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து இந்த குப்பை ஒரு வாரத்துக்குள் அப்புறப்படுத்தப்படும்’ என்றார்.

இதையடுத்து, சிகிச்சை சரியில்லை என்று கூறி டாக்டர் களை நோயாளிகளின் உறவினர்கள் சில நேரம் தாக்குவதால், டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் கேட்டனர். பின்னர், இதுகுறித்து விரிவான பதில் அளிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.