மகனின் திருமண விழாவில் பேனர் : முன்னாள் திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு


மகனின் திருமண விழாவில் பேனர் : முன்னாள் திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு
x
தினத்தந்தி 4 Nov 2019 5:07 AM GMT (Updated: 4 Nov 2019 5:07 AM GMT)

நெல்லையில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு இல்ல திருமண விழாவில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை,

சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்தவர் ரவி. இவரது ஒரே மகள் சுபஸ்ரீ. இவர் கடந்த 12-ந்தேதி மோட்டார் சைக்கிளில் சென்றபோது, சட்டவிரோதமாக சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண ‘பேனர்’ சரிந்து சுபஸ்ரீ மீது விழுந்தது.

இதனால் நிலை தடுமாறி சாலையில் விழுந்த அவர் மீது, பின்னால் வேகமாக வந்த லாரி ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இது தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் நடந்தபோது கட்சி நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தி திமுக தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதுபோல் அதிமுக தரப்பிலும்  பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் ராதாபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான அப்பாவு மகனின் திருமணம் கடந்த ஒன்றாம் தேதி நடந்தது. பணகுடியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்காக ஷான் தாமஸ் மஹால் திருமண மண்டபம் முன்பு பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டன. இந்த பேனர்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதாக அப்பாவு மீது பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story