பொள்ளாச்சி பாலியல் வன்முறை : விசாரணை அறிக்கையை வெளியிட முடியாது -சிபிஐ
பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கின் விசாரணை அறிக்கையை வெளியிட முடியாது என சிபிஐ தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை
பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த வழக்கு தொடர்பாக உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நியாயம் கிடைக்காது என்று அப்பகுதி மக்களும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்கு தமிழக அரசும் சம்மதித்து சி.பி.ஐ.க்கு வழக்கை மாற்றுவது தொடர்பாக அரசாணை வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து, பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைதான 7 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணையை தொடங்கியது.
சென்னை ஐகோர்ட்டில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ விசாரணையின் இறுதி அறிக்கையை தங்களுக்கு வழங்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டிருந்தது. இது தொடர்பாக பதில் அளிக்க சிபிஐக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி மற்றும் நீதிபதி சரவணன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கின் விசாரணை ரகசிய விசாரணையாக இருப்பதால், இறுதி அறிக்கையை மனுதாரர்களுக்கு வழங்குவது அதை பகிரங்கப்படுத்துவதாக ஆகிவிடும் என தெரிவித்தார்.
அதேசமயம், இந்த வழக்கின் விசாரணையை நீதிமன்றம் மேற்பார்வையிடுவதற்கோ அல்லது கண்காணிப்பதற்கோ தங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபமும் இல்லை என சிபிஐ வழக்கறிஞர் தெரிவித்தார்.
விசாரணையின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடியும் வரை, கைது செய்யப்பட்ட அனைவரும் தொடர்ந்து சிறையிலேயே அடைக்கப்பட்டிருக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டது.
வழக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐ க்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை டிசம்பர் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story