பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் விபத்து: 100 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் பாய்ந்தது - பெண் பலி, 11 பேர் படுகாயம்


பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் விபத்து: 100 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் பாய்ந்தது - பெண் பலி, 11 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 7 Nov 2019 10:06 PM GMT (Updated: 7 Nov 2019 10:06 PM GMT)

பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் சென்ற சுற்றுலா வேன் 100 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதில் பெண் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

பழனி,

குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 21 பேர் பெங்களூரு, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டு நேற்று முன்தினம் கொடைக்கானலுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள சுற்றுலா இடங்களை கண்டு ரசித்துவிட்டு நேற்று மாலை பழனி நோக்கி சென்றனர்.

அவர்கள் பழனி அருகே வட்டமலை என்ற இடத்தில் கொடைக்கானல்-பழனி மலைப்பாதையில் வந்தபோது, வேன் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. ஒருகட்டத்தில் அந்த வேன் சாலையோர தடுப்புச்சுவரில் மோதி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளானது.

பள்ளத்தில் வேன் பாய்ந்ததில் இடிபாடுகளில் சிக்கிய சுற்றுலா பயணிகள் கூக்குரலிட்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இடிபாடுகளில் சிக்கிய சுற்றுலா பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே வேனின் அடியில் சிக்கிய அபிஷேக் காந்தி மனைவி தேவிஷா (26) என்பவர் உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி 11 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் காயமின்றி உயிர்தப்பினர்.

இதையடுத்து விபத்தில் காயமடைந்தவர்களை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story