மாநில செய்திகள்

ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களை இடிக்கக்கோரி வழக்கு - தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Occupied and build Places of worship Case for demolition Government of Tamil Nadu to reply High Court order

ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களை இடிக்கக்கோரி வழக்கு - தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களை இடிக்கக்கோரி வழக்கு - தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
அரசு அலுவலக வளாகங்களிலும், பொது இடங்களிலும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களை இடிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

காஞ்சீபுரம் மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் எம்.கண்ணதாசன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் சாலைகள், நடைபாதைகள், அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமித்து பல மதங்களின் வழிபாட்டுத்தலங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதுபோன்ற செயல் நாடு முழுவதும் நடக்கிறது.


கோவை வருவாய் அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள விநாயகர் கோவிலை இடிக்க கோரி ராமகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கிற்கு பதில் அளித்து தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அறிக்கை தாக்கல் செய்தது.

அதில், சாலை, நடைபாதை, நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து 3,003 கோவில்கள், 131 தேவாலயங்கள், 27 மசூதிகள், இதர வழிபாட்டுத்தலங்கள் 7 என மொத்தம் 3,168 வழிபாட்டுத்தலங்கள் சட்டவிரோதமாக கட்டப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், தமிழக அரசு கடந்த 1968-ம் ஆண்டே அரசு அலுவலகங்களில் உள்ள சாமி போட்டோக்கள், சிலைகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டது. இதன்பின்னர் கடந்த 1993-ம் ஆண்டு அரசு அலுவலகங்களில் வழிபாட்டுத்தலங்கள் இல்லை என்பதை உயர் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவுகளை அதிகாரிகள் அவமதிப்பு செய்து, அரசு அலுவலகங்களில் வழிபாட்டுத்தலங்களை சட்டவிரோதமாக கட்டுவதற்கு அனுமதிக்கின்றனர்.

இதுதொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு ஒரு வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மதுரை கிளை, மதம் தொடர்பான நிகழ்ச்சிகள் அரசு அலுவலக வளாகத்தில் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மேற்கோள் காட்டி, அனைத்து துறை தலைவருக்கும், தமிழக பணியாளர் நிர்வாகத்துறை சுற்றறிக்கை அனுப்பியது. இதன்படி, அரசு அலுவலக வளாகத்தில் மதம் தொடர்பான நிகழ்ச்சி நடந்தால், அது கோர்ட்டு அவமதிப்பு செயலாகும்.

மேலும் சுப்ரீம் கோர்ட்டும், பொது இடங்களில் வழிபாட்டுத்தலங்களை கட்டக்கூடாது என்று கடந்த 2009-ம் ஆண்டே உத்தரவிட்டது. ஆனால், இதையெல்லாம் தமிழகத்தில் பின்பற்றுவது இல்லை.

எனவே, பொது இடங்களில் வழிபாட்டுத்தலங்களை புதிதாக கட்டுவதற்கும், ஏற்கனவே கட்டியவற்றை புதுப்பிப்பதற்கும் இடைக்கால தடை விதிக்க வேண்டும். அரசு அலுவலக வளாகங்களிலும், நீர்நிலைகள், சாலைகள், நடைபாதைகள் உள்ளிட்ட பொது இடங்களிலும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வழிபாட்டுத்தலங்கள் அனைத்தையும் இடித்து அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து, தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற டிசம்பர் 4-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.