உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வில் விருப்ப மனு 15, 16-ந் தேதிகளில் வழங்கலாம்


உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வில் விருப்ப மனு 15, 16-ந் தேதிகளில் வழங்கலாம்
x
தினத்தந்தி 10 Nov 2019 11:45 PM GMT (Updated: 10 Nov 2019 9:11 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் தொண்டர்களிடம் இருந்து வரும் 15, 16 ஆகிய தேதிகளில் விருப்ப மனுக்களை அ.தி.மு.க. வாங்க இருக்கிறது. இதற்காக மாவட்ட அளவில் மனுக்கள் வாங்க நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டசபை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோகமாக வெற்றி பெற்றதை தொடர்ந்து, புதிய உற்சாகத்துடன் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் வெளியாக உள்ள நிலையில், முதல் கட்டமாக தொண்டர்களிடம் இருந்து வரும் 15 மற்றும் 16-ந்தேதி விருப்பமனுக்களை அ.தி.மு.க. பெற இருக்கிறது.

இது குறித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட அனுமதி கோரும் தொண்டர்கள் அதற்கான கட்டண தொகையை செலுத்தி, விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். மாநகராட்சி மேயர் பதவிக்கு ரூ.25 ஆயிரம், மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினருக்கு ரூ.5 ஆயிரம், நகர மன்றத்தலைவர் ரூ.10 ஆயிரம், நகர மன்ற வார்டு உறுப்பினர் ரூ.2,500, பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு ரூ.5,000, பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ரூ.1,500, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ரூ.5 ஆயிரம், ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர் ரூ.3 ஆயிரம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் 15 மற்றும் 16-ந்தேதிகளில் மாவட்ட தலைநகரங்களில் அ.தி.மு.க. அலுவலகங்களில் அன்றை தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உரிய கட்டணம் செலுத்தி, விண்ணப்ப படிவங்களை பெற்று, அங்கே பூர்த்தி செய்து வழங்கலாம். இதற்காக ஒவ்வொரு மாவட்ட அளவிலும் மனுக்களை வாங்குவதற்காக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம்-அவைத்தலைவர் மதுசூதனன், அண்ணா தொழிற்சங்க பேரவை சங்கரதாஸ், மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ். வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம்- மாணவர் அணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு. தென் சென்னை தெற்கு மாவட்டம்-அமைப்பு செயலாளர்கள் வா.மைத்ரேயன், ஆதிராஜாராம், ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் ஜெயவர்தன், அண்ணா தொழிற்சங்க பேரவை பொருளாளர் அப்துல் அமீது, மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ.

வட சென்னை தெற்கு மாவட்டம்-அமைச்சர் டி.ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர், மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா. தென் சென்னை வடக்கு மாவட்டம்-அமைப்பு செயலாளர்கள் சி.பொன்னையன், எஸ்.கோகுல இந்திரா, அண்ணா தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் கே.பாண்டுரங்கன், மாவட்ட செயலாளர் தி.நகர் சத்தியா.

காஞ்சீபுரம் மத்தியம்-அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணிச்செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், கலைப்பிரிவு செயலாளர் ஆர்.வி.உதயகுமார், மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், காஞ்சீபுரம் மேற்கு மாவட்டம்-அமைப்பு செயலாளர்கள் மைதிலி திருநாவுக்கரசு, வி.சோமசுந்தரம், மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், காஞ்சீபுரம் கிழக்கு மாவட்டம்-இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, மீனவர் அணி செயலாளர் எம்.சி.முனுசாமி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன்.

திருவள்ளூர் கிழக்கு-அமைச்சர்கள் பா.பென்ஜமின், மாபா பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி, சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச்செயலாளர் அப்துல் ரகீம், மாவட்ட செயலாளர் அலெக்ஸ்சாண்டர் எம்.எல்.ஏ., திருவள்ளூர் மேற்கு-மருத்துவ அணிச்செயலாளர் டாக்டர் பி.வேணுகோபால், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பி.வி.ரமணா, ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் செவ்வை மு.சம்பத்குமார், மாவட்ட செயலாளர் சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story