எழுதி வைக்கப்பட்ட நாடகம் தி.மு.க.வில் அரங்கேற்றப்படுகிறது -அமைச்சர் ஆர்பி.உதயகுமார்
எழுதி வைக்கப்பட்ட நாடகம் தி.மு.க.வில் அரங்கேற்றப்படுகிறது என அமைச்சர் ஆர்பி.உதயகுமார் கூறினார்.
மதுரை
மதுரையை அடுத்த பேரையூரில் அரசின் சாதனை விளக்க தொடர் ஜோதி நடைபயணம் நடைபெற்றது.
நடைபயணத்தை தொடங்கி வைத்த ஆர்பி உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் .
உள்ளாட்சித் தேர்தல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விருப்ப மனுக்கள் பெறப்பட்டு அதற்குப் பிறகு யாரால் தடைபட்டது என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.
அரசியல் இயக்கம் நடத்துபவர்களுக்கும் நன்றாக தெரியும். முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் அறிவிப்புக்கு இணங்க தமிழகம் முழுவதும் விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டிருக்கிறோம்.
மு.க.ஸ்டாலினுக்கு இதிலென்ன சந்தேகம் என்று தெரியவில்லை. பாட்டெழுதி பேர் வாங்குபவர்களும் இருக்கிறார்கள். பாட்டிலே குறை கண்டுபிடித்து பேர் வாங்க நினைப்பவர்களும் இருக்கிறார்கள். எந்த வகையை சேர்ந்தவர் இவர் என்பதை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.
அனேகமாக அவர் பாட்டெழுதி பேர் வாங்குவதாக தெரியவில்லை. எழுதிய பாட்டில் குறை கண்டுபிடித்து அதன் மூலமாக பெயர் வாங்கலாம் என்று நினைக்கிறார். இப்போது அவருடைய பாட்டு எடுபடவில்லை. அவர் ஒரு மூத்த அரசியல்வாதியாக இருப்பவர். அனுபவம் தெரிந்தவர். ஏதாவது பேசவேண்டும் என்பதற்காக பேசுவது இந்த விஷயத்தில் நியாயமாக இருக்காது.
எழுதி வைக்கப்பட்ட நாடகம் தி.மு.க.வில் அரங்கேற்றப்படுகிறது. அங்கே வாரிசு அரசியல். இங்கே ஜனநாயக அரசியல். அங்கே இருப்பதெல்லாம் மன்னராட்சி. இங்கே இருப்பதெல்லாம் ஜனநாயக ஆட்சி.
தி.மு.க.வில் வாரிசு அரசியல், சர்வாதிகாரம், மன்னர் ஆட்சி என்று மகுடம் சூட்டிக் கொள்கிறார்கள். நம்மிடம் இருப்பது ஜனநாயகம். மேலும், அதிமுக தலைவர்கள் மக்களால் மகுடம் சூட்டப்பட்டவர்கள் என்றார்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நதிநீர் பிரச்சினையில் என்ன செய்தார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ்.அழகிரிக்கு அமைச்சர் ஆர்பி.உதயகுமார் கேள்வி விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story