மாநில செய்திகள்

2-கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - முழு விவரம் + "||" + 2-Phase Local Elections Full details

2-கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - முழு விவரம்

2-கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - முழு விவரம்
மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி வெளியிட்டார்.
சென்னை,

இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி வெளியிட்டார்.

தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்  டிசம்பர் 27 மற்றும் 30ந்தேதிகளில் 2 கட்டங்களாக  நடைபெறும். இதற்கான அறிவிப்பாணை டிசம்பர் 6ந்தேதி வெளியிடப்படும். உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ந்தேதி நடைபெறும். 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல், 13ம் தேதி இறுதிநாள்,  மறைமுக தேர்தல் கூட்ட நாள்- 11.1.2020.

தேசிய தகவல் மையத்துடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

 கிராம உள்ளாட்சி தேர்தல் வழக்கம்போல் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

முதற்கட்ட தேர்தலில் 1 கோடியே 64 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர். 2-ம் கட்ட தேர்தலில் 1 கோடியே 67 லட்சம் பேரும் வாக்களிக்க உள்ளனர். 

டிசம்பர் 27ம் தேதி முதற்கட்டமாக 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3232 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 6251 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 49638 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடக்கும்.

இரண்டாவது கட்டமாக டிசம்பர் 30ம் தேதி 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3239 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 6237 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 49686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடக்கும்.

அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு சின்னங்கள் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.

உள்ளாட்சி அமைப்புகளில் 1 லட்சத்து 18 ஆயிரத்து தொள்ளாயிரத்து 74 பதவிகளை நிரப்பிட நேரடி தேர்தல் நடைபெறும். இதில் 31 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 658 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 388 ஊராட்சிக்கு உட்பட்ட 6886 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் நேரடி தேர்தல் நடைபெறும். வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடைபெறும்.

கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலுக்கு நான்கு வண்ணங்களில் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படும்.  ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சி தலைவர்கள் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.

தேர்தல் முடிந்து 30 நாட்களுக்குள் செலவு கணக்கை ஒப்படைக்காவிட்டால் 3 ஆண்டுகள் போட்டியிட முடியாது. தேர்தல் பணிகளுக்காக  870 தேர்தல் அலுவலர்களும், 16,840 தேர்தல் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என கூறினார்.

388 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது.   நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

தேர்தல் அட்டவணை

முதல் கட்ட தேர்தல்: டிசம்பர் 27

2-ம் கட்ட  கட்ட தேர்தல்: டிசம்பர் 30

வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாள்: டிசம்பர் 6

வேட்பு மனு தாக்கல் கடைசி நாள்: டிசம்பர் 13

திரும்ப பெற கடைசி நாள்: டிசம்பர் 18

தேர்தல் முடிவு: ஜனவரி 2, 2020
வேட்பாளர் செலவு 

கிராம ஊராட்சி  வார்டு உறுப்பினர் - ரூ.9 ஆயிரம்

கிராம ஊராட்சி தலைவர் - ரூ. 34 ஆயிரம் 

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் - ரூ. 85 ஆயிரம்

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்- ரூ. 1,70, 000

ஆசிரியரின் தேர்வுகள்...