தொடர்மழை : சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் அதிகரிப்பு


தொடர்மழை : சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 2 Dec 2019 12:55 PM IST (Updated: 2 Dec 2019 5:35 PM IST)
t-max-icont-min-icon

தொடர் கனமழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்து உள்ளது.

சென்னை,

கடந்தவாரம்  பெய்த கனமழையால் சென்னையின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நான்கு முக்கிய நீர்த்தேக்கங்களில்  தண்ணீர் நிரம்பி உள்ளது.

இன்று காலையில் இருந்து மழை குறைந்துவிட்ட போதிலும்,  தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து தண்ணீர்,  நீர்த்தேக்கங்களுக்கு தொடர்ந்து வருகின்றன.

நான்கு நீர் தேக்கங்களில்  ஒருங்கிணைந்த சேமிப்பு மொத்த கொள்ளளவு 11,257 மில்லியன்  கன அடிக்கு 4091 மில்லியன் கன அடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில், ஏரிகளின் மொத்த சேமிப்பு 1,694  மில்லியன் கன அடியாக இருந்தது. 

கடந்த இரண்டு நாட்களில் நீர்த்தேக்கங்களின் சேமிப்பில் கிட்டத்தட்ட 806 மில்லியன் கன அடி  நீர்  வந்து உள்ளது என  நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதிக மழை பெய்ததால் நீர் தேக்கங்களில் சேமிப்பு 10 சதவீதம்  அதிகரித்துள்ளது.

செங்குன்றம், செம்பரம்பாக்கம், பூண்டி ஆகிய மூன்று நீர்த்தேக்கங்களில் வினாடிக்கு சுமார் 2,000  கன அடி நீர் வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் நீர்  சேமிப்பு மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்

இன்று  காலை 6 மணிக்கு முடிவடைந்த மழையால் கடந்த 24 மணி நேரத்தில், சோழவரம் ஏரி உள்பட  நான்கு ஏரிகளில் 10 செ.மீ அதிக மழை பெய்தது. செம்பரம்பாக்கம் ஏரியில் 9 செ.மீ மழை பதிவாகியிருந்தாலும், செங்குன்றம்  மற்றும் பூண்டியில் உள்ள ஏரிகளில் முறையே 8 செ.மீ மற்றும் 7 செ.மீ கனமழை பெய்தது.

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளாக  பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் உள்ளன. தற்போது பெய்து வரும் கனமழையால் மூவாயிரத்து 231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு 938 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. 

மூவாயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு தற்போது ஆயிரத்து 604 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு 400 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது ஆயிரத்து 81 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 94 மில்லியன் கன அடியாக உள்ளது. மூவாயிரத்து 645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு தற்போது  843 மில்லியன் கன அடியாக இருக்கிறது. 

சென்னை அடுத்த ஆவடி பருத்திபட்டு ஏரி,  பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி மற்றும் கீழ்கட்டளை ஏரியும் நிரம்பி வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவான 23.3 அடியில் 18 அடியை எட்டியது.  ஏரிக்கு வினாடிக்கு ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதுவரை ஏரியில் 384 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பில் உள்ளது.

Next Story