கடலூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு - மு.க.ஸ்டாலின் ஆறுதல்


கடலூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு - மு.க.ஸ்டாலின் ஆறுதல்
x
தினத்தந்தி 3 Dec 2019 4:30 AM IST (Updated: 3 Dec 2019 3:33 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி குளம்போல காட்சி அளித்தது. குடியிருப்பு பகுதிகளையும் மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர்.

மேலும் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், அங்கிருந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். அதன்படி கடலூர், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம் என மாவட்டம் முழுவதும் 10 முகாம்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கும்பகோணத்தில் நடைபெற்ற திருமண விழாவை முடித்துவிட்டு நேற்று காலை காரில் கடலூருக்கு வந்தார். கடலூர் கோ-ஆப்டெக்ஸ் சிக்னல் அருகில் வந்த அவரை மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வரவேற்றார்.

பின்னர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு கம்மியம்பேட்டைக்கு வந்தார். அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியான வீட்டை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின் வீட்டின் உரிமையாளர் நாராயணனின் தம்பி வேல்முருகனை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதைத்தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்டு கூத்தப்பாக்கம் கான்வென்ட் தெருவில் உள்ள தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறி, அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

முன்னதாக மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்கியபோது பொதுமக்களுக்கு இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதில் சில பெண்கள் தவறி கீழே விழுந்தனர். இதை கண்டு கொள்ளாமல் பின்னால் நின்றவர்கள் அவர்களின் மீது ஏறி நிவாரண பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் கீழே விழுந்தவர்கள் கூச்சலிட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகவே கனத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 17 பேர் இறந்து போன துயரமும், அதிர்ச்சியுமான செய்தி நெஞ்சை உலுக்குகிறது. உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதால், அச்சம் ஏற்படுகிறது.

கடலூரில் 3000-த்துக்கும் அதிகமான வீடுகள் மழை நீரில் மிதக்கின்றன. மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். மழையின் காரணமாக குழந்தைகள், முதியோர் உள்ளிட்டோருக்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

அனைத்து தரப்பு மக்களும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சியாளர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும். கவனக்குறைவும், அலட்சியமும் நீடித்தால், 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட செயற்கை பெருவெள்ளத்தை போன்ற சூழலை தமிழகம் சந்திக்க வேண்டிய அவலநிலை உருவாகிவிடும். அந்த நிலை இனி ஒருக்காலத்திலும் உருவாகிவிடக்கூடாது என எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் ஆட்சியாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். வருவாய்த்துறை உள்ளிட்ட தொடர்புடைய அனைத்து துறை அதிகாரிகளும் முழுவீச்சில் செயல்பட வேண்டியதை அரசு உறுதிப்படுத்திட வேண்டும்.

அதுபோலவே, தி.மு.க. அனைத்து நிலையில் உள்ள நிர்வாகிகளும், தொண்டர்களும் அவரவர் பகுதிகளில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை உடனடியாக செய்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன். குறிப்பாக, மேட்டுப்பாளையத்தில் வீடு இடிந்து, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதலாக இருந்து, அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யவும், மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் விரைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story