தமிழகத்தில் 10 நகரங்களில்: குடிநீர் வழங்கல், கழிவுநீர் மேலாண்மையை மேம்படுத்த ரூ.1,475 கோடி நிதியுதவி - ஆசிய வளர்ச்சி வங்கி தகவல்


தமிழகத்தில் 10 நகரங்களில்: குடிநீர் வழங்கல், கழிவுநீர் மேலாண்மையை மேம்படுத்த ரூ.1,475 கோடி நிதியுதவி - ஆசிய வளர்ச்சி வங்கி தகவல்
x
தினத்தந்தி 4 Dec 2019 3:30 AM IST (Updated: 4 Dec 2019 3:30 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தின் 10 நகரங்களில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் மேலாண்மையை மேம்படுத்தும் திட்டத்துக்காக ரூ.1,474.75 கோடி கடனுக்கான ஒப்பந்தத்தில் ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளன.

சென்னை,

தமிழகத்தில் உள்ள நகர உள்ளாட்சி அமைப்புகளின் உள்கட்டமைப்பு வசதிகளை வலுவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகர்மயமாதல் அதிகரிப்பதாலும், நகர்ப்புறங்களில் வசிக் கும் மக்களின் எண்ணிக்கை உயர்வதாலும் மக்களின் வசதிக்கு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கு ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவி பெற்று குறிப்பிட்ட சில நகர்ப்புறங்களில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு நகர்ப்புற முதலீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் முதல் கட்ட பணிக்காக ரூ.1209.87 கோடி செலவிடப்பட்டு, தற்போது அவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் இரண்டாவது திட்டத்திற்காக ரூ.1,474.75 கோடி கடனுக்கான ஒப்பந்தத்தில் ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் மத்திய நிதித்துறை அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளன.

இதன் மூலம் தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட 10 நகரங்களில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் ஆகியவற்றை துரிதப்படுத்துவதற்கான உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. அவற்றோடு, துப்புரவுப் பணிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு, வடிகால் அமைப்புகள் ஆகியவை மேம்படுத்தப்படும். இது, பொருளாதார மேம்பாட்டுக்கான நல்ல சுற்றுப்புறசூழலை உருவாக்கும் மாநில அரசின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும்.

மேலும், மாநிலத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் தொழில் வளர்ச்சிக்கு இந்த திட்டம் அடித்தளமிடுவதால், நகர்ப்புறவாசிகள், தொழிலாளர்கள், தொழிற்சாலைகள் ஆகியோருக்கு பயனளிக்கும் திட்டமாகவும் அது அமையும். தொழில் வளர்ச்சியினால் வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு நன்மை அளிப்பதாக இருக்கும்.

இந்தத் திட்டம் தற்போது ஆம்பூர், திருச்சி, திருப்பூர், வேலூர் ஆகிய 4 நகரங்களை இலக்காக கொண்டுள்ளது. இங்கு கழிவுநீர் சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு மேம்படுத்தப்படும். ஏற்கனவே இருக்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும் அல்லது புதிய நிலையங்கள் கட்டப்படும்.

அவற்றோடு நீரேற்று நிலையங்கள் கட்டுவது, திட்டம் செயல்படுத்தப்படும் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளையும் (வறுமை கோட்டுக்கு கீழ் இருப்போரின் வீடுகள் உள்பட) கழிவுநீர் கட்டமைப்பில் இணைப்பது ஆகிய பணிகள் செயல்படுத்தப்படும். இந்த 4 நகரங்களிலும் உள்ள தொழிற்சாலைகளில் கழிவுநீர் மறுசுழற்சி வசதிகள் ஏற்படுத்தப்படும்.

மேலும், மதுரை, திருப்பூர் ஆகிய நகரங்களில் குடிநீர் வினியோக வசதியை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 1,260 கி.மீ. நீளத்துக்கு புதிய குடிநீர் வினியோக குழாய்கள் பதிக்கப்படும். இந்த இணைப்பில் வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் குடும்பத்தினர் உள்பட 1.90 லட்சம் குடும்பத்தினர் சேர்க்கப்படுவார்கள்.

அதோடு, இரண்டு புதிய நீர் சுத்திகரிப்பு நிலையங்களும், 200 கி.மீ. நீளம் கொண்ட நீர் கொண்டு செல்லும் புதிய வழிப்பாதையும், 230 கி.மீ. நீளமுள்ள நீர் இணைப்பு அமைப்புகளும் உருவாக்கப்படும்.

இந்த தகவலை ஆசிய வளர்ச்சி வங்கி வெளியிட்டுள்ளது.

Next Story