நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த மழை; மண் சரிவால் போக்குவரத்து துண்டிப்பு


நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த மழை; மண் சரிவால் போக்குவரத்து துண்டிப்பு
x
தினத்தந்தி 3 Dec 2019 10:06 PM GMT (Updated: 3 Dec 2019 10:06 PM GMT)

நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளன.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் அதிகாலை 5.30 மணிஅளவில் பெய்த மழையினால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மேலும் மரங்கள் முறிந்து ரோட்டில் விழுந்ததால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணிஅளவில் மழை பெய்தது. அப்போது திடீரென குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் நந்தகோபால் பாலம் அருகே ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று, ராட்சத பாறையை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியவதாது:-

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ராட்சத பாறைகள் விழுந்து உள்ளன. இந்த பாறைகளை அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. மேலும் மரம் மற்றும் அபாயகரமான பாறைகள் எந்த நேரத்திலும் விழும் அபாயத்தில் உள்ளது. இதேபோல் தொடர் மழையினால் மண்சரிவு ஏற்படும் நிலையும் உள்ளது.

அதனால் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் இன்று (நேற்று) 2-வது நாளாக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. சீரமைப்புகள் பணிகள் மற்றும் மழையின் தாக்கம் முடிந்தபின் வாகன போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேகமலை உள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு, மேகமலை மலை அடிவார பகுதியான தென்பழனி முதல், மேகமலையின் ஹைவேவிஸ் வரையிலான 36 கி.மீ. தூரம் மலைப்பாதை அமைக்கப்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகளின் கூட்டம் தற்போது மேலும் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், கடந்த சில தினங்களாக மேகமலை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று பெய்த மழையால் மேகமலை மலைப் பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதையடுத்து மேகமலைக்கு செல்லக்கூடிய வாகனங்களை மலை அடிவாரமான தென் பழனியில் போலீசாரும், வனத்துறையினரும் தடுத்து நிறுத்தினர். அதேபோல் மலையின் மீது இருந்து கீழே இறங்கும் வாகனங்கள் ஹைவேவிஸ் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டது.

மேகமலை மலைப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர் மழை பெய்து வருவதால் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மேகமலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று பிற்பகல் 1 மணியளவில் அணையின் நீர்மட்டம் 66.01 அடியாக உயர்ந்தது.

வைகை அணை நீர்மட்டம் 66 அடியை எட்டியவுடன், அணை மதகு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள அபாய சங்கு ஒலிக்கப்பட்டது.

இந்தநிலையில் மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகையாற்றின் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story