சுவர் இடிந்து 17 பேர் பலி: எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் - தமிழக அரசு அறிவிப்பு


சுவர் இடிந்து 17 பேர் பலி: எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் - தமிழக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Dec 2019 5:45 AM IST (Updated: 4 Dec 2019 10:14 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து பலியான 17 பேரின் குடும்பத்துக்கு நிவாரணமாக தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பலியானவர்களின் குடும்பத்தினரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூரில் வீடுகள் மீது தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட 17 பேர் பலியானார்கள். இதுபற்றி தகவல் அறிந்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதியம் கோவை வந்தார்.

பின்னர் அவர் கார் மூலம் மேட்டுப்பாளையம் நடூருக்கு சென்றார். அப்போது அவருடன் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். அங்கு அவர்கள் 17 பேர் பலியான இடத்தை நேரில் பார்த்தனர்.

அதன் பின்னர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். அவர்களுக்கு கூடுதல் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும், வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கனமழையின் காரணமாக மேட்டுப்பாளையத்தில் மூன்று வீடுகளின் அருகாமையில் இருந்த மதில் சுவர் இடிந்து விழுந்ததில், அந்த மூன்று வீடுகளும் தரைமட்டமாகி, அங்கு வசித்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. தகவல் கிடைத்ததும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டெடுத்தோம்.

விபத்துக்கு காரணமான மதில் சுவர் இருந்த வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த செய்தி கிடைத்தவுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.4 லட்சம் வழங்க உத்தரவிட்டிருந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ.4 லட்சம் நிதியுடன் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.6 லட்சம் சேர்த்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் அரசால் வழங்கப்படும்.

மேலும், இந்த சம்பவத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிதாக வீடுகள் கட்டித்தரப்படும். உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் உள்ள தகுதியானவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். நானும், துணை முதல்-அமைச்சரும், உள்ளாட்சித்துறை அமைச்சரும், எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் நேரடியாக சென்று பார்த்தபோது, பல வீடுகள் ஓட்டு வீடுகளாக உள்ளன. அவர்களுக்கு அரசின் சார்பாக, குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக வீடுகள் கட்டித்தரப்படும். பவானி ஆற்றின் கரையோரமாக சுமார் 300 பேர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு மாற்று இடத்தில் வீடுகள் கட்டித்தருவதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நானும், துணை முதல்-அமைச்சரும் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, தமிழகத்தை குடிசையில்லா மாநிலமாக உருவாக்க வேண்டுமென்று முடிவெடுத்து, பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் வசிக்கின்றவர்களுக்கு எல்லாம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தருவதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதற்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அந்த இலக்கின் அடிப்படையில் லட்சக்கணக்கான வீடுகளை, வீடில்லாத ஏழை மக்களுக்கு கட்டித்தருவதற்கு அரசால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் சம்பவ இடத்திற்கு சென்று பலியான 17 பேரின் உறவினர்களை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் வீடுகள் இடிந்து விழுந்த பகுதியை அவர் பார்வையிட்டார். பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

17 பேரின் உயிரிழப்புக்கு காரணமான இந்த சுவர் எந்த நேரத்திலும் இடிந்து விழும் என்று அச்சத்துடன் இருந்த காலனி பகுதி மக்கள் இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் மற்றும் அமைச்சருக்கு தொடர்ந்து புகார் மனு அளித்து வந்துள்ளனர். அப்போதே உரியமுறையில் நடவடிக்கை எடுத்து இருந்தால் இத்தனை உயிர்கள் பறிபோய் இருக்காது.

அரசு, அமைச்சர், அதிகாரிகள் அலட்சியத்தால் 17 பேர் இறந்துள்ளது வேதனைக்குரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தி.மு.க. சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களை நேரில் சந்தித்தது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினேன். இதயம் கனத்தது. 4 குடும்பங்கள் நிர்மூலமாகி உள்ளன. மாவட்ட கலெக்டரிடம் பாதிப்புகள் குறித்து பேசினேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவன செய்ய வலியுறுத்தினேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டார்.

Next Story