நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு 5 டி.எம்.சி.யை எட்டுகிறது


நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு 5 டி.எம்.சி.யை எட்டுகிறது
x
தினத்தந்தி 5 Dec 2019 4:30 AM IST (Updated: 5 Dec 2019 1:32 AM IST)
t-max-icont-min-icon

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு 5 டி.எம்.சி.யை எட்டும் நிலையில் உள்ளது.

சென்னை,

சென்னை மாநகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகள் திகழ்கின்றன. இந்த ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக ஏரிகளில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

11 ஆயிரத்து 257 மில்லியன் கன அடி (11 டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட இந்த 4 ஏரிகளிலும் தற்போது 4 ஆயிரத்து 736 மில்லியன் கன அடி (4.7 டி.எம்.சி.) நீர் இருப்பு உள்ளது. அதாவது 5 டி.எம்.சி.யை எட்டும் நிலையில் ஏரிகள் உள்ளன.

கிருஷ்ணா நதிநீர்

சென்னையின் குடிநீர் தேவைக்காக சராசரியாக ஒரு மாதத்திற்கு 1 டி.எம்.சி. என ஆண்டுக்கு 12 டி.எம்.சி. வரை தண்ணீர் தேவைப்படுகிறது. இந்தநிலையில் கிருஷ்ணா நதி நீர் மூலம் மேலும் 2 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர மாநிலம் தருவதாகவும் அறிவித்து உள்ளது. இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் மேலும், அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்குள்ள கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் தற்போது பூண்டி ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது. 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் நேற்றைய நிலவரப்படி 1,436 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

பூண்டி, சோழவரம்

தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்ததால் ஏரியின் நீர்மட்டம் 1,518 மில்லியன் கன அடி (1.5 டி.எம்.சி.) ஆக இருக்கிறது. குடிநீர் தேவைக்காக 389 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் பூண்டி ஏரியில் 375 கன அடி மட்டுமே நீர் இருப்பு இருந்தது. இதேபோல், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 228 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 412 கன அடி வீதம் நீர் வந்து கொண்டு இருக்கிறது. குடிநீர் தேவைக்காக 100 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் வெறும் 42 மில்லியன் கன அடி மட்டுமே இருப்பு இருந்தது.

1,103 மில்லியன் கன அடி

புழல் ஏரி 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த ஏரியில் தற்போது 1,887 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. (1.8 டி.எம்.சி.) ஏரிக்கு 309 கன அடி வீதம் நீர் வருகிறது. குடிநீர் தேவைக்கு 89 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 1,103 மில்லியன் கன அடி (1.1 டி.எம்.சி.) நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 52 கன அடியாகவும், வெளியேற்றப்படும் நீர் 25 கன அடியாகவும் உள்ளது. வருகிற 20-ந்தேதி வரை மழை நீடிக்கும் என்று கூறப்படுவதால் ஏரிகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Next Story