மாநில செய்திகள்

கூடுதலாக 50 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விளைச்சல்: ‘தமிழகத்தில் வெங்காய விலை கட்டுக்குள் கொண்டு வரப்படும்’ + "||" + An additional 50 thousand acres Yield to land: in Tamil Nadu Onion

கூடுதலாக 50 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விளைச்சல்: ‘தமிழகத்தில் வெங்காய விலை கட்டுக்குள் கொண்டு வரப்படும்’

கூடுதலாக 50 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விளைச்சல்: ‘தமிழகத்தில் வெங்காய விலை கட்டுக்குள் கொண்டு வரப்படும்’
தமிழகத்தில் கூடுதலாக 50 ஆயிரம் ஏக்கரில் வெங்காயம் விளைச்சல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அவற்றின் விலை கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் தோட்டக்கலைத்துறை இயக்குனர் டாக்டர் என்.சுப்பையன் தெரிவித்தார்.
சென்னை,

வெங்காய விளைச்சல் பாதிப்பு, பதுக்கல் ஆகிய காரணங்களால் அவற்றின் விலை கிடுகிடுவென புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ சாம்பார் வெங்காயம்(சின்ன வெங்காயம்) ரூ.140-வரைக்கும், பல்லாரி(பெரிய வெங்காயம்) கிலோ ரூ.100 வரைக்கும் நேற்றைய நிலவரப்படி விற்பனையானது.


வெங்காயம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்லுமோ? என்ற அச்சம் இல்லத்தரசிகள் மத்தியில் காணப்படுகிறது. இந்தநிலையில் வெங்காய விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசின் தோட்டக்கலை துறை முனைப்பு காட்டி உள்ளது.

சிறப்பு பேட்டி

இதுதொடர்பாக தோட்டக்கலை துறை இயக்குனர் டாக்டர் என்.சுப்பையன் ‘தினத்தந்தி’ நிருபருக்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தமிழ்நாட்டுக்கு ஓராண்டு எவ்வளவு வெங்காயம் தேவைப்படுகிறது.

பதில்:- தமிழ்நாட்டுக்கு ஓராண்டு 7 லட்சம் டன் வெங்காயம் தேவையாக இருக்கிறது. கிராமப்புறங்களில் சின்ன வெங்காயம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. நகர்ப்புறங்கள் மற்றும் ஓட்டல்களில் பெரிய வெங்காயத்தின் பயன்பாடு அதிகமாக உள்ளது.

அதனடிப்படையில் 60 சதவீதம் அதாவது, 4 லட்சம் டன் சின்ன வெங்காயமும், 3 லட்சம் டன் பெரிய வெங்காயமும் தேவையாக உள்ளது.

கேள்வி:- தமிழ்நாட்டில் எவ்வளவு ஏக்கர் நிலப்பரப்பில் வெங்காய விளைச்சல் நடக்கிறது? ஒரு ஏக்கருக்கு எவ்வளவு டன் கிடைக்கும்?

பதில்:- 60 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் வெங்காய விளைச்சல் நடக்கிறது. ஒரு ஏக்கருக்கு 5 டன் சின்ன வெங்காயமும், 7 டன் பெரிய வெங்காயமும் கிடைக்கும்.

50 சதவீதம் பூர்த்தி

கேள்வி:- தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் வெங்காயம் நம்முடைய தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு உள்ளதா?

பதில்:- 50 சதவீதம் பூர்த்தி செய்கிறது. மீதம் உள்ள 50 சதவீத வெங்காயம் மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

கேள்வி:- வெங்காய விளைச்சலுக்கு ஏற்ற காலம் எது? சாகுபடிக்கு எவ்வளவு நாட்கள் ஆகும்?

பதில்:- ‘ஆடிப்பட்டம்’ எனப்படும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்களும், ‘தைப்பட்டம்’ எனப்படும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வெங்காய விளைச்சலுக்கு உகந்த காலம் ஆகும். சின்ன வெங்காயம் சாகுபடிக்கு 2 மாதங்களும், பெரிய வெங்காயம் சாகுபடிக்கு 3 மாதங்களும் ஆகும்.

இலவச விதை

பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நாமக்கல், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெங்காய விளைச்சல் செய்யப்படுகிறது.

கேள்வி:- வெங்காய விளைச்சலை அதிகரிக்க தோட்டக்கலை துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்னென்ன?

பதில்:- தமிழகம் முழுவதும் தோட்டக்கலை துறைக்கு சொந்தமாக 80 பண்ணை நிலங்கள் உள்ளன. இங்கு வேளாண் துறை அதிகாரிகள் மூலம் வெங்காய சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

தேசிய விதை கழகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் இலவசமாக விதைகளும் வழங்கப்படுகிறது.

மானிய விலையில் கிடங்குகள்

கேள்வி:- சாகுபடி செய்யப்படும் வெங்காயத்தை பாதுகாக்க கிடங்குகள் கட்டி தரப்படுமா?

பதில்:- விவசாயிகளுக்கு சொந்தமான இடங்களில் தலா ரூ.1.5 லட்சம் செலவில் 5 ஆயிரம் கிடங்குகள்(கொட்டகைகள்) கட்டப்பட்டுள்ளது. இதில் ரூ.75 ஆயிரம் அரசு மானியம் ஆகும். மீதம் உள்ள ரூ.75 ஆயிரம் விவசாயிகள் பணம் ஆகும்.

தற்போது மேலும் 500 கிடங்குகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேள்வி:- இந்த மானியத்தை பெறுவதற்கு விவசாயிகள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

பதில்:- உழவன் கைபேசி செயலியை பதவிறக்கம் செய்து, அதன் மூலம் எளிதில் விண்ணப்பிக்கலாம்.

2020-ம் ஆண்டுக்குள்...

கேள்வி:- வெங்காய சாகுபடியில் தமிழ்நாடு தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா?

பதில்:- இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை, தேனி, வேலூர், ஈரோடு, சேலம், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்பட்ட இடங்களில் 50 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் வெங்காயம் விளைச்சல் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வெங்காய விலை கட்டுக்குள் கொண்டு வரப்படும். மேலும் வருகிற ஆண்டு(2020) முதல் தமிழ்நாடு வெங்காய உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலம் என்ற சிறப்பை பெறும். எனவே விவசாயிகளுக்கு நல்ல லாபமும், பொதுமக்களுக்கு உகந்த விலையில் வெங்காயம் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தொடர்ந்து உச்சத்தை நோக்கி செல்கிறது தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.976 உயர்வு பவுன் ரூ.42,592-க்கு விற்பனை
தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.976 உயர்ந்து ஒரு பவுன் ரூ.42 ஆயிரத்து 592-க்கு விற்பனை ஆனது.
2. தொடர்ந்து உச்சம் பெட்ரோல் விலை ரூ.80-ஐ தொட்டது பொதுமக்கள் அதிருப்தி
தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து, நேற்று ஒரு லிட்டர் ரூ.80-ஐ தொட்டது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
3. நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு 335 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்ந்து 335 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
4. தனியார் பால் விலையை தமிழக அரசே நிர்ணயிக்க வேண்டும் - முகவர்கள் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை
தனியார் பால் விலையை தமிழக அரசே நிர்ணயிக்க வேண்டும் என்று முகவர்கள் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-