தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை பரப்பும் 3 குழுக்கள் கண்டுபிடிப்பு!


தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை பரப்பும் 3 குழுக்கள் கண்டுபிடிப்பு!
x
தினத்தந்தி 9 Dec 2019 1:34 PM IST (Updated: 9 Dec 2019 1:34 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் 3 குழுக்கள் இணையதளங்களில் குழந்தைகள் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்ததை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

சென்னை,

இந்திய அளவில் தமிழகத்தில், அதிலும் குறிப்பாக சென்னையில்தான் குழந்தைகள் ஆபாச வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்கின்றன புள்ளிவிவரங்கள்.

தமிழக காவல் துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு சமீபத்தில் உருவாக்கப்பட்டது. இந்த பிரிவு கூடுதல் டிஜிபி ரவி தலைமையில் செயல்படுகிறது.

இந்த நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க, தவறான வழியில் செல்லும் இளம் வயதினர் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலமே முடியும் என்ற நோக்கத்தில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான அமெரிக்க புலனாய்வு துறையின் ஆய்வறிக்கையில், குழந்தைகளின் ஆபாச படங்களை இந்தியாவில் தான் அதிகம் பார்ப்பதாகவும், அதிலும் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இந்த எண்ணிக்கை அதிகம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதனடிப்படையில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் பட்டியலை தமிழக காவல் துறைக்கு மத்திய உள்துறை அனுப்பி வைத்துள்ளது.

குழந்தைகளின் ஆபாசப்படங்கள் பார்ப்பதில் சென்னை முதலிடத்தில் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இந்த வகை ஆபாச படம் பார்ப்பவர்களின் 3000 பேர் கொண்ட பட்டியல் தயாராக உள்ளதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு கூடுதல் டிஜிபி  ரவி எச்சரிக்கை விடுத்திருந்தார். 

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தாங்கள் அந்தப் பட்டியலில் உள்ளோமோ..? அல்லது சிக்கி விடுவோமோ...? என்ற அச்சத்தில் உள்ளனர். 

மேலும் பலரும் ஆபாச படம் பார்ப்பதை தவிர்த்து வருகின்றனர். இந்த நடவடிக்கை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு மீம்ஸ்களும், வீடியோக்களும் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.

விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் இவ்வாறு செயல்பட்டாலும், இந்த காவல்துறையின் எச்சரிக்கையை தவறாக பயன்படுத்திக் கொண்டு காவல்துறையினர், செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டு மிரட்டி பணம் பறிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு ஆதாரமாக திருநெல்வேலி காவலர் ஒருவர் ஆபாச படம் பார்த்ததாக இளைஞர் ஒருவரை செல்போனில் விசாரிப்பது போல் ஆடியோ ஒன்று வெளியானது

இவ்வாறு மிரட்டுவது குறித்து காவல்துறை தரப்பில் கேட்டபோது, 3000 பேர் கொண்ட பட்டியலில் உள்ளவர்கள் மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு, தகவல் அறிக்கை பதிவு செய்த பின்பு முறையாக அழைத்து விசாரிக்கப்படுவார்கள் என்றும், இதுபோன்று திடீரென செல்போனில் தொடர்பு கொண்டு காவலர்கள் விசாரிக்க மாட்டார்கள் எனவும் கூடுதல் டிஜிபி  ரவி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், குழந்தைகள் ஆபாச படத்தை இணையதளத்தில் பதிவிட்ட, பார்த்த விவகாரத்தில் திருச்சியில் முதற்கட்ட விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர்.

திருச்சியில், இணையதள முகவரியில் குழந்தைகள் ஆபாச படங்கள் பார்த்தவர்களின், பரப்பியவர்களின் 60 பேரின் பட்டியலை வைத்து திருச்சி காவல்துறை விசாரணை நடத்துகின்றனர்.

தமிழகம் முழுவதும் 3 குழுக்கள் இணையதளங்களில் குழந்தைகள் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்ததை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்

வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பினால் அவர்கள் கண்காணிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
1 More update

Next Story