திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா "கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது"
திமுகவில் இருந்து பழ.கருப்பையா விலகினார் "கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது" என குற்றஞ்சாட்டி உள்ளார்.
சென்னை:
அதிமுக சார்பில் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவானவர் பழ.கருப்பையா. பின்னர் அக்கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து பழ.கருப்பையா அப்போது திமுக தலைவராக இருந்த கருணாநிதி முன்னிலையில் திமுகவில் சேர்ந்தார். இந்நிலையில், தற்போது திமுகவில் இருந்து விலகிய பழ.கருப்பையா விலகியதற்கான காரணத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது:-
சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தபின் தி.மு.க.வில் சேர்வதில் எனக்கு தயக்கம் இருந்தது. ஒரு பொதுவிழாவில் கலைஞர் மிகைபடச் சொன்னாரோ என எண்ணும் அளவுக்கு என்னை வலியுறுத்தி அழைத்தார்.
கலைஞர் மறைந்த அன்றே தி.மு.க.வை விட்டு வெளியேறுவது குறித்துச் சிந்தித்தேன். பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்புணர்வு, நாடாளுமன்றத் தேர்தல் என இவற்றின் காரணமாக அந்த முடிவு தள்ளிக் கொண்டே போய்விட்டது.
கழகத்தின் நிகழ்கால நடவடிக்கைகள், போக்குகள், சிந்தனைப் பாங்குகள், ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போலக் கட்சியை நடத்துகின்ற விதம், அறிவும், நேர்மையும் பின்னுக்கு தள்ளப்பட்டு பணமே எல்லாம் என்று கருதுகின்ற தன்மை, இவையெல்லாம் என்னிடம் பெரிய மனச்சலிப்பை உண்டாக்கியிருந்தன.
இவற்றோடு பொருந்திப் போகமுடியாத நிலையில், தி.மு.க.வை விட்டு ஒதுங்கிக் கொள்வது என்றும், அடிப்படை உறுப்பினர் நிலையிலிருந்து விலகிக் கொள்வது என்றும் முடிவெடுத்தேன். நேரடியாக மு.க.ஸ்டாலினைப் பார்த்து விடையும் பெற்றேன்.
ஊழல்வாதிகளை முன்னிலைப்படுத்துவது, ஊழலைப் பொது வாழ்வின் அங்கமாக ஏற்பது. உட்கட்சிக்குள்ளே கூட விமர்சிக்க முடியாதவாறு கட்சி விசுவாசம் என்னும் பெயரால் அவற்றை நிலைநாட்டுவது இவையெல்லாம் எந்த வகையிலும் பொதுவாழ்க்கைக்கு ஏற்புடையவை அல்ல.
மாநிலங்களைப் பல கூறுகளாக உடைப்பது, இந்தியாவை இந்து என்னும் பொது அடையாளத்துக்குள் கொண்டு வருவது, இவையெல்லாம் மொழி வழி இன உணர்வைச் சிதைக்கின்ற போக்குகளாகும். இதிலுள்ள ஆபத்தைத் திமுக சரியாக புரிந்து கொண்டிருக்கிறது என்று என்னால் கருத முடியவில்லை. வெறும் ஒருநாள் அறிக்கைகளோடு இவையெல்லாம் முடிந்து விடுகின்றவை அல்ல.
கடந்த 50 ஆண்டுகளாக ஊழலை ஊழலே இடப்பெயர்ச்சி செய்கிறது. இது அல்ல மாற்று அரசியல் என்னும் கருத்தே என்னுடைய விலகலுக்கான காரணம்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story