குறுஞ்செய்தி வாயிலாக மாணவர்கள் வருகைப்பதிவை பெற்றோருக்கு தெரிவிக்கும் வசதி அரசு பள்ளிகளில் அடுத்த மாதம் அமல்படுத்த திட்டம்


குறுஞ்செய்தி வாயிலாக   மாணவர்கள் வருகைப்பதிவை பெற்றோருக்கு தெரிவிக்கும் வசதி   அரசு பள்ளிகளில் அடுத்த மாதம் அமல்படுத்த திட்டம்
x
தினத்தந்தி 13 Dec 2019 8:38 PM GMT (Updated: 13 Dec 2019 8:38 PM GMT)

பள்ளி மாணவர்கள் வருகைப்பதிவை குறுஞ்செய்தி வாயிலாக பெற்றோருக்கு தெரிவிக்கும் வசதி அடுத்த மாதம் (ஜனவரி) முதல் அமல்படுத்த கல்வித்துறை திட்டமிட்டு இருக்கிறது.

சென்னை,

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் சுயவிவரங்கள் அனைத்தும் கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தில் (இ.எம்.ஐ.எஸ்.) பதிவு செய்ய கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன.

அந்த இணையதளத்தில்தான் மாணவர்களின் வருகை தினமும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் தனியாக வருகைப்பதிவேடு பின்பற்றினாலும், இந்த இணையதளத்தில் மாணவர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும் என்று கல்வித்துறை கட்டாயமாக்கி இருக்கிறது.

இந்தநிலையில், தமிழக கல்வித்துறையின் கீழ் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளும், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 69 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களின் வருகைப்பதிவை பெற்றோருக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வாயிலாக தெரிந்து கொள்ளும் வசதியை கல்வித்துறை இணையதளத்தில் கொண்டு வந்தது.

பெற்றோருக்கு தெரிவிக்கும் வசதி

அதற்காக மாணவர்களின் பெற்றோருடைய செல்போன் எண்ணை கல்வித்துறையின் கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தின் இணையதளத்தில் ஆசிரியர்கள் பெற்று பதிவேற்றம் செய்யவும், அது அவர்களின் பெற்றோரின் செல்போன் எண்ணா? என்பதையும் சரிபார்க்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி மாணவர்களின் பெற்றோருடைய செல்போன் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மாதம் இறுதிக்குள் அந்த பணியை நிறைவு செய்ய அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு, கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் முன்னோட்டமாக சில பள்ளிகளில் சோதனை முயற்சி செய்ததில் அது சிறப்பாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த திட்டத்தை அடுத்த மாதம் (ஜனவரி) முதல் அமல்படுத்த திட்டமிட்டு இருப்பதாக கல்வித்துறை வட்டாரங் கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு, வகுப்பறைக்கு வந்தாலும், வராவிட்டாலும் குறுஞ்செய்தி வாயிலாக அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிடும்.

Next Story