முதல் கட்ட உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு - வாக்காளர்கள் 4 ஓட்டு போட்டனர்


முதல் கட்ட உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு - வாக்காளர்கள் 4 ஓட்டு போட்டனர்
x
தினத்தந்தி 28 Dec 2019 12:15 AM GMT (Updated: 2019-12-28T03:45:55+05:30)

27 மாவட்டங்களில் முதல் கட்டமாக 45 ஆயிரத்து 336 பதவிகளுக்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு வாக்காளரும் 4 ஓட்டுகள் போட்டனர்.

சென்னை,

தமிழகத்தில் சென்னை உள்பட 10 மாவட்டங்களை தவிர்த்து, மீதமுள்ள 27 மாவட்டங்களிலும் ஊரக பகுதிகளுக்கு மட்டும் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, முதல் கட்டமாக நேற்று அந்த 27 மாவட்டங்களில் உள்ள ஊரக பகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

இந்த முதல் கட்ட தேர்தலில், 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2,546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 4,700 கிராம ஊராட்சி தலைவர்கள், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 45 ஆயிரத்து 336 பதவி இடங்களுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது.

சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் வாக்குப்பதிவுக்கு மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டாலும், உள்ளாட்சி தேர்தலில் பழைய வாக்குச் சீட்டு முறையிலேயே ஓட்டுப் பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. காலையிலேயே ஏராளமான ஆண்களும், பெண்களும் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வரிசையில் நின்று ஆர்வத்துடன் ஓட்டு போட்டனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி அருகேயுள்ள சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக் கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில், குடும்பத்தினருடன் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். இதேபோல், ஒரு சில அமைச்சர்களும் தங்களது சொந்த ஊர்களில் ஓட்டுப்போட்டனர்.

8 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதால், வாக்காளர்கள் உற்சாகமாக ஓட்டுப்போட வந்ததை காண முடிந்தது. அதிலும், முதல் முறையாக வாக்களித்த இளம் வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு முறை ஆச்சரியமாக இருந்தது. இளம் வாக்காளர்களைப் போல், முதியவர்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

இந்த தேர்தலில், ஒவ்வொரு வாக்காளரும் 4 ஓட்டுகள் போட வேண்டியிருந்ததால், 4 நிறங்களில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சி தலைவர்கள் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன.

மேலும், இரண்டு கிராம ஊராட்சி வார்டுகளுக்கு பொதுவாக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில், ஒரு வார்டுக்கு வெள்ளை நிறத்திலும், மற்றொரு வார்டுக்கு இளநீல நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன.

முதல்கட்ட வாக்குப்பதிவுக்காக 24,680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்தலில் ஆண் வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் என மொத்தம் ஒரு கோடியே 30 லட்சம் பேர் ஓட்டுப்போட தகுதி பெற்று இருந்தனர்.

ஓட்டுப்பதிவு ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடந்தது. ஒவ்வொரு வாக்காளரும் 4 ஓட்டுகள் போட வேண்டியிருந்ததால், சிறிது நேரம் ஆனது. இதனால், பல வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர். காலை 9 மணி நிலவரப்படி 10.4 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 24.08 சதவீதமும், 1 மணி நிலவரப்படி 42.47 சதவீதமும், 3 மணி நிலவரப்படி 57.50 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன. வாக்குப் பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. அதற்குள் வாக்குச்சாவடிக்குள் வந்த வாக்காளர்கள் மட்டும் டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு நடத்தப்பட்ட இந்த முதல் கட்ட தேர்தலில் சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பெட்டிகள் அரக்கு கொண்டு ‘சீல்’ வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

ஒரு சில அசம்பாவித சம்பவங்களை தவிர ஓட்டுப்பதிவு பொதுவாக அமைதியாக நடந்து முடிந்தது.

பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடி என கண்டறியப்பட்ட சுமார் 4 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும், 1,709 வாக்குச்சாவடிகளில் வெப்-கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. அதன் மூலம் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வாக்குப்பதிவை கண்காணித்தனர்.

ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவின்போது, சிறு சிறு பிரச்சினைகள் எழுந்தன. அதனால், சிறிது நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது என்றாலும், தேர்தல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை மூலம் அதை சரி செய்தனர். இதனால், தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம் கலியாவூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குச்சீட்டை மாற்றி தவறாக மடித்ததால் வேட்பாளர்களின் முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சுமார் அரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

சாத்தான்குளம் பஞ்சாயத்து யூனியன் எழுவரைமுக்கி பஞ்சாயத்து 6-வது வார்டு தாய்விளை பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்து, ஊரின் எல்லையில் ரோட்டின் ஓரத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூர் அருகே பிச்சிவிளை பஞ்சாயத்தில் எஸ்.சி. பிரிவினருக்கு 6 வாக்குகளும், மற்ற பிரிவினருக்கு சுமார் 700 வாக்குகளும் உள்ளன. இந்த நிலையில், பிச்சிவிளை பஞ்சாயத்து தலைவர் பதவியை எஸ்.சி. (பெண்) பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இதனால் அங்கு 13 வாக்குகளே பதிவாயின.

திருவள்ளூரை அடுத்த பாப்பரம்பாக்கம் பகுதியில் சிலர் 2 வாக்குச்சாவடிகளுக்குள் புகுந்து அடித்து நொறுக்கினார்கள். பின்னர் வாக்குச்சீட்டுகளை வெளியே கொண்டு சென்று தீவைத்து எரித்துவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.

இதேபோல் ஒண்டிகுப்பம் பகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றவரை கைது செய்யக்கோரி, 2 வாக்குச்சாவடிகளுக்கு மக்கள் பூட்டு போட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

கண்டிகை பகுதியில், வாக்குச்சாவடியில் ஓட்டுச்சீட்டில் ஏற்கனவே முத்திரை குத்தப்பட்டுள்ளதாக கூறி மறியல் நடைபெற்றதால், ஓட்டுப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

வாக்குச்சீட்டு குளறுபடியால் சில ஓட்டுச்சாவடிகளில் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி ஒன்றியம் பாப்பம்பாடி கிராமத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஒரு வாக்குசாவடியில் ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்குச்சீட்டில் கை சின்னத்துக்கு பதிலாக உதயசூரியன் சின்னம் இடம்பெற்று இருந்தது. இதனால் அந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் தொடங்கியது.

அரூர் அருகே உள்ள கோணம்பட்டி கிராமத்தில், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இதேபோல் வெங்கடதர அள்ளி பகுதியை தனி ஊராட்சியாக மாற்ற கோரி கிராம மக்கள் வாக்குப்பதிவை புறக்கணித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல்புறம் ஊராட்சியில் மட்டும் வாக்குப்பதிவுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. வாக்காளர்கள் 4 ஓட்டு போடுவதற்காக 4 வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்குள்ள வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டு இருந்தன.

தேர்தல் நடைபெற்ற மீதமுள்ள வாக்குச்சாவடிகளில் சுமார் 90 ஆயிரம் வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன.

தேர்தலில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க மொத்தம் 60,918 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 7 முதல் 8 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். மொத்தம் 4 லட்சத்து 2 ஆயிரத்து 195 அலுவலர்கள் தேர்தல் பணி செய்தனர்.

தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான 2-வது கட்ட தேர்தல் வருகிற 30-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2,544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 4,924 கிராம ஊராட்சி தலைவர்கள், 38,916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 46 ஆயிரத்து 639 பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. மொத்தம் ஒரு கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போட இருக்கின்றனர்.

2 கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் ஜனவரி 2-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஏற்கனவே, 18 ஆயிரத்து 570 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் சராசரியாக 76.19 சதவீத வாக்குகள் பதிவாயின. மாவட்ட வாரியாக பதிவான வாக்குப் பதிவு சதவீதம் வருமாறு:-

திருவள்ளூர் -77.66

திருவண்ணாமலை -71

தஞ்சை -66

திருவாரூர் -76.93

நாகப்பட்டினம் -63.54

கோவை- 77.23

ஈரோடு -75.56

திருப்பூர் -73.84

நீலகிரி -65.86

தூத்துக்குடி -69.98

கன்னியாகுமரி -65.90

திருச்சி -76.18

புதுக்கோட்டை -80.69

கரூர் -82.54

அரியலூர் -71.13

பெரம்பலூர் -77.40

சேலம் -81.68

நாமக்கல் -79

தர்மபுரி -68.56

கிருஷ்ணகிரி -73

மதுரை -77.14

தேனி -75

திண்டுக்கல் -76.08

விருதுநகர் - 73.65

ராமநாதபுரம் -67.63

சிவகங்கை - 73.4

கடலூர் - சின்னம் மாறியதால் தீக்குளிக்க முயற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே நல்லவன்பட்டி 21-வது ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் லலிதா மகாராஜனின் சின்னமான சாதாரண துணிப்பைக்கு பதிலாக வாக்குச்சீட்டில் பெண்கள் பயன்படுத்தும் ‘ஹேண்ட் பேக்’ (கைப்பை) அச்சிடப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் வேட்பாளரின் உறவினர்கள் 2 பேர் தீக்குளிக்க முயன்றனர். அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தினார்கள். இந்த சம்பவத்தால் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.

கடத்தூர்-படுக்கையில் வந்து ஜனநாயக கடமை ஆற்றிவிட்டு இறந்த 92 வயது முதியவர்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மொடச்சூர் ஊராட்சிக்கு உள்பட்ட பி.பி.எம்.நகரை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 92). இவர் உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்தார். எனினும் அவர் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க விரும்பினார். இதைத்தொடர்ந்து அவருடைய பேரன் கார்த்திக் என்பவர் முத்துசாமியை தூக்கி படுக்கையில் (ஸ்ட்ரெச்சர்) வைத்து பச்சைமலை அருகே ஒரு பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு மாலை 4.30 மணி அளவில் அழைத்து வந்தார்.

அங்கு அவர் படுக்கையில் படுத்தபடி தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றினார். பின்னர் அவர் வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார். படுக்கையில் வந்து ஜனநாயக கடமையாற்றிவிட்டு இறந்த முதியவரை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வியந்து பாராட்டினர்.

Next Story