இலவச வேட்டி-சேலை நூல் கொள்முதலில் ரூ.21¼ கோடி முறைகேடு: 3 மாதத்தில் புகாரை விசாரித்து முடிக்க வேண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

இலவச வேட்டி-சேலை திட்டத்துக்காக நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ரூ.21¼ கோடி முறைகேடு நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், புகாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு ஒரு கோடியே 25 லட்சம் இலவச வேட்டி, சேலைகள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான நூலை தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை கொள்முதல் செய்து, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கியுள்ளது. ஆனால் தரம் குறைந்த நூலை அரசு அதிகாரிகள் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்துள்ளனர்.
ரூ.21¼ கோடி முறைகேடு
இதனால், ரூ.21.31 கோடி முறைகேடு நடந்துள்ளது. நூற்பாலைகளில் நாள் ஒன்றுக்கு 6 சேலைகள் நெய்யப்படும். தரம் குறைந்த நூல் என்பதால் தற்போது 3 சேலைகள் மட்டுமே நெய்யப்படுகிறது.
இதனால் நெசவாளர்களின் தொழிலுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நூல் கொள்முதலில் நடந்துள்ள பெரும் தொகை முறைகேடு குறித்தும், இதில் சம்பந்தப்பட்ட கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது குறித்தும் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தேன். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, முறைகேடு புகார் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
போலீசார் விசாரிக்க உத்தரவு
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் அய்யப்பராஜ் ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி, ‘மனுதாரர் அளித்துள்ள புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சட்டப்படி 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story