சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் மீண்டும் சந்திப்பு மு.க.ஸ்டாலின் தான் படித்த 7-ம் வகுப்பு அறையில் அமர்ந்து நெகிழ்ச்சி


சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் மீண்டும் சந்திப்பு மு.க.ஸ்டாலின் தான் படித்த 7-ம் வகுப்பு அறையில் அமர்ந்து நெகிழ்ச்சி
x
தினத்தந்தி 4 Jan 2020 4:05 AM IST (Updated: 4 Jan 2020 4:05 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தான் படித்த 7-ம் வகுப்பு அறையில் அமர்ந்து நெகிழ்ச்சி அடைந்தார்.

சென்னை,

சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் 1970-ம் ஆண்டு படித்து முடித்த முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் பங்கு பெற்றார். அவர் 1965-ம் ஆண்டு முதல் 1970-ம் ஆண்டு வரை இந்த பள்ளியில் படித்து இருந்தார்.

இந்த காலக்கட்டங்களில் மொத்தம் 250 மாணவர்கள் படித்து இருந்ததாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்த நிகழ்ச்சியில் 120 மாணவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

மு.க.ஸ்டாலின் நேற்று திடீரென்று பள்ளிக்கு வருகை தந்தார். சக முன்னாள் மாணவர்கள் இதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. மு.க.ஸ்டாலினை பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.ஜெ.மனோகரன் வரவேற்றார். பள்ளி வளாகத்துக்குள் சக மாணவர்களுடன் நடந்து சென்று, தான் படித்த காலத்தில் இருந்த கட்டிடங்களையும், இப்போது இருக்கும் கட்டிடங்களையும் வகைப்படுத்தி கலந்துரையாடினார்.

தான் படித்த 7-ம் வகுப்பு ‘அ’ பிரிவில் அப்போது அமர்ந்து இருந்த அதே இருக்கையில் சென்று அமர விருப்பப்பட்டார். அதன்படி, சக மாணவர்கள் அவரை அழைத்து சென்று அமர வைத்தனர். அப்போது அவர் நெகிழ்ச்சி அடைந்தார்.

ஆசிரியர்கள் கவுரவிப்பு

பின்னர், விளையாட்டு மைதானத்துக்கு சென்று பார்வையிட்டார். சக மாணவர்களுடன், ‘நான் கிரிக்கெட் விளையாடிய நேரத்தில், நான் தூக்கி அடித்த பந்து வகுப்பு அறையின் ஜன்னலில் பட்டுவிட்டது’ என்று சிரித்தபடி பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார். அதனைத்தொடர்ந்து தன்னுடன் படித்த சக மாணவர்களுடன் சேர்ந்து டீ குடித்தார்.

2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், இன்று (சனிக்கிழமை) 50 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களை முன்னாள் மாணவர்கள் கவுரப்படுத்த இருக்கின்றனர்.

இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்வதாக உறுதி அளித்து இருக்கிறார் என்று சக முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர்.
1 More update

Next Story