ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தாழ்த்தப்பட்டோருக்காக போராடியவர் ராமானுஜர் ஆழ்வார்கள் ஆய்வு மையம் விழாவில் ஆர்.எம்.வீரப்பன் பேச்சு


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே   தாழ்த்தப்பட்டோருக்காக போராடியவர் ராமானுஜர்   ஆழ்வார்கள் ஆய்வு மையம் விழாவில் ஆர்.எம்.வீரப்பன் பேச்சு
x
தினத்தந்தி 4 Jan 2020 11:00 PM GMT (Updated: 2020-01-05T05:15:44+05:30)

“ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தாழ்த்தப்பட்டோருக்காக போராடியவர் ராமானுஜர்” என்று ஆழ்வார்கள் ஆய்வு மையம் விழாவில் ஆர்.எம்.வீரப்பன் பேசினார்.

சென்னை, 

ஆழ்வார்கள் ஆய்வு மையம் மற்றும் பாரத் பல்கலைக்கழகம் சார்பில் ‘மார்கழி பெருவிழா - மங்கல திருவிழா’ நிகழ்ச்சி, சென்னை தியாகராயநகரில் உள்ள சர்.பிடி.தியாகராயர் அரங்கில் நேற்று நடந்தது.

ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் நிறுவன செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி.யின் மனைவி அனுசுயாவின் திருவிளக்கு ஏற்றுதலுடன் நிகழ்ச்சி காலை தொடங்கியது. புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி ஆகியோரின் பைந்தமிழ்ப் பண்ணிசை அரங்கம், பேராசிரியர் தி.ராசகோபாலன் எழுதிய ‘பெரியாழ்வார் போற்றும் பெருவாழ்வு’ நூல் வெளியீடு, ஆழ்வார்களின் அமுதத்தமிழில் நம்மைப் பெரிதும் கவர்ந்தது இறை இன்பமா? இலக்கிய இன்பமா? எனும் தலைப்பில் பட்டிமன்றம், வேளுக்குடி கிருஷ்ணனின் ‘வையத்திலே வாழ்ச்சி’ எனும் தலைப்பில் இலக்கிய உரை, மேடை இசை நாடக கலைஞர்களின் ‘வாலி மோட்சம்-அரிச்சந்திரா’ நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் ஸ்ரீமத்பரஹம்ஸ ஸ்ரீபெரியகேள்வி அப்பன் திருமலை திருப்பதி சடகோப ராமானுஜ ஸ்ரீபெரிய ஜீயர், ஸ்ரீகோவிந்த ராமானுஜ சின்ன ஜீயர் ஆகியோர் கலந்துகொண்டு அருளாசி வழங்கினர்.

‘அருந்தமிழ் அறிஞர்’ விருது

அதனைத் தொடர்ந்து ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் ‘அருந்தமிழ் அறிஞர்’ விருது மற்றும் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி இரவு நடந்தது. மையத்தின் நிறுவன செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவர் தெ.ஞானசுந்தரம், ஸ்ரீரங்கம் கிருஷ்ணமாச்சாரியர், பாரத் பல்கலைக்கழக கல்விக்குழு உறுப்பினர் பேராசிரியர் தி.ராசகோபாலன், புலவர் கோ.சாரங்கபாணி ஆகியோருக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் ‘அருந்தமிழ் அறிஞர்’ விருது மற்றும் பொற்கிழி வழங்கினார்.

விருது பெற்றவர்களை தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், தமிழறிஞருமான அவ்வை நடராஜன் வாழ்த்தி தகுதியுரை ஆற்றினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் ‘இதயம் குளிர்விக்கும் ஈரத்தமிழ் முற்றம்’ எனும் தலைப்பில் தமிழின் சிறப்புகள் கூறும் வாழ்த்தரங்கம் நடந்தது.

ஆர்.எம்.வீரப்பன் பேச்சு

நிகழ்ச்சியில் ஆர்.எம்.வீரப்பன் பேசியதாவது:-

தெருக்கூத்துகள் தான் நாடகத்தின், சினிமாவின் தொடக்கநிலை ஆகும். பேரறிஞர் அண்ணா எந்த ஊருக்கு சென்றாலும் தெருக்கூத்தை ஆர்வமாக ரசித்து பார்க்க கூடியவர். பெண்ணை போல ஆண்கள் வேடம் கட்டி ஆடுவது சாதாரண விஷயமல்ல. சிவாஜிகணேசன் உள்ளிட்ட பெரும் நடிகர்கள் கூட தெருக்கூத்துகளில் பெண் வேடம் கட்டி ஆடியிருக்கிறார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தாழ்த்தப்பட்டோருக்காக போராடியவர், ஸ்ரீராமானுஜர். அவர் வெறும் வைணவத்துக்கு மட்டும் தலைவர் அல்ல, ஒரு சாம்ராஜ்ய சீர்திருத்தத்துக்கே தலைவர் ஆவார். அதனால் தான் ராமானுஜர் பெயரிலும் விருது வழங்கி கவுரவித்து வருகிறோம். அப்துல்கலாம், கருணாநிதி போன்றவர்களும் ராமானுஜர் விருதை பெற்றிருக்கிறார்கள்.

தமிழ் வளர வேண்டும்

ஆழ்வார்கள் ஆய்வு மையம் எனும் அமைப்பு நிச்சயம் தேவையானது. எந்த சமய அமைப்புகளும் புராண கருத்தோடு தோன்றியது அல்ல. மனிதன் தான் சாதியின் பெயரில் பிரச்சினை செய்கிறான்.

பெண்களுக்கு சுதந்திரம் தேவை என்று போராடியதே இலக்கியங்கள் தான் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. தமிழ் வளரவேண்டும். அதன்மூலம் சமயமும், வைணமும் வளரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story