ஊரக பகுதிகளிலும் தி.மு.க. கொடி கட்டி பறக்கிறது கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு


ஊரக பகுதிகளிலும் தி.மு.க. கொடி கட்டி பறக்கிறது கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 5 Jan 2020 10:30 PM GMT (Updated: 5 Jan 2020 10:03 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் பெரிய வெற்றி பெற்று, ஊரக பகுதிகளிலும் தி.மு.க. கொடி கட்டி பறக்கிறது என்று சென்னையில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து, மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதியின் மார்பளவு சிலை திறப்பு விழா, கருணாநிதி கணினி கல்வியகம் என்ற திறன் மேம்பாட்டு மையத்தின் தொடக்க விழா ஆகியவை சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் உள்ள தி.மு.க. அலுவலகத்தின் அருகே நேற்று நடந்தது. விழாவுக்கு, சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

கருணாநிதியின் மார்பளவு சிலை மற்றும் கருணாநிதியின் கணினி கல்வியகத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொத்தானை அழுத்தி திறந்து வைத்தார். தொடர்ந்து, கருணாநிதியின் சிலைக்கு மலர் தூவி மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு, வெள்ளியில் செய்யப்பட்ட வீரவாள், கதாயுதம் ஆகியவை வழங்கப்பட்டது.

இதையடுத்து திரண்டிருந்த தி.மு.க.வினர் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கருணாநிதியின் சிலையை தமிழகம் முழுவதும் தொடர்ந்து, திறந்து வைத்துக் கொண்டிருக்கிறோம். சென்னையை பொறுத்தவரை 4-வது சிலையாக சைதாப்பேட்டையில் திறந்திருக்கிறோம். சிலை திறந்து வைத்துத்தான் கருணாநிதிக்கு பெருமை தேடித் தரவேண்டும் என்பது அல்ல. அவருடைய உழைப்பை, அவர் ஆற்றியிருக்கும் பணிகளை எடுத்து சொல்லக்கூடிய வகையில், அதன் மூலமாக இந்த தமிழகத்துக்கு மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த இதுபோன்ற பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.

கருணாநிதியை பொதுப்பணித்துறை அமைச்சராக மட்டுமல்ல, முதல்-அமைச்சராக தேர்ந்தெடுத்த தொகுதியும் சைதாப்பேட்டைதான். சைதாப்பேட்டை என்பது கருணாநிதியுடைய பேட்டை. தி.மு.க.வினுடைய பேட்டை. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் தங்கள் தொகுதிகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை ஏற்படுத்தவேண்டும்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்கள்தான் அதிக இடங்களில் வெற்றி பெறுவது என்பது மரபு வழியாக வந்து கொண்டிருக்கிறது. அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சி அவர்களிடத்தில் உள்ளது. மக்களும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு வாக்களித்தால்தான் உள்ளாட்சியில் பணிகள் நடக்கும் என்ற எண்ணம் ஏற்படுவது இயல்பு.

எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது, ஊரக பகுதிகளில் ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றியது. ஆனால் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி பகுதிகளில் அதிக இடங்களை பெற்ற கட்சி என்றால் அது தி.மு.க.தான். அது வரலாறு. அதுவும் இப்போது மாற்றப்பட்டு நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி பகுதி மட்டும் அல்ல, ஊரக பகுதிகளிலும் தி.மு.க. கொடி கட்டி பறக்கிறது.

உள்ளாட்சி தேர்தலில் ஊரக, கிராம பகுதிகளில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வை விடவும் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. முந்திரிகொட்டை அமைச்சர் ஒருவர், அவர்கள் (அ.தி.மு.க.) வளர்பிறை என்றும், நாங்கள் (தி.மு.க.) தேய்பிறை என்றும் கூறியிருக்கிறார். எது வளர்பிறை? எது தேய்பிறை என்று அமைச்சருக்கு தெரியவில்லை.

கருணாநிதி இந்த இனத்துக்காக, மொழிக்காக, நமக்காக வாழ்ந்தவர். அவர் நம்மைவிட்டு மறைந்திருந்தாலும், இன்றைக்கும் அவர்தான் இயக்கிக் கொண்டிருக்கிறார். எனவே அவர் வழியில் நின்று அவர் விட்டுச் சென்றிருக்கும் பணிகளை நிறைவேற்றுவதுதான் நம்முடைய சபதமாக, உறுதியாக இருக்கவேண்டும். 2020 தி.மு.க.விற்கான களம். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சேகர்பாபு, வாகை சந்திரசேகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க., அ.ம.மு.க. உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க. வில் இணையும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று நடந்தது. சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்று கட்சியினர், தி.மு.க.வில் இணைந்தனர். புதிதாக இணைந்தவர்களை தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார்.

கட்சியில் இணைந்தவர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடந்திருந்தால் 85 சதவீத இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றிருக்கும். ஆளுங்கட்சியின் முறைகேடுகளை மீறி தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.

வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சமர்ப்பிக்கக் கோரியது தொடர்பான வழக்கு வருகிற 20-ந்தேதி சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. அப்போது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தேர்தல் ஆணையம் சமர்ப்பித்தால் ஆளுங்கட்சியின் முறைகேடுகள் தெரியவரும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளையே, உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க. பெற்றிருக்கிறது. வருகிற சட்டமன்ற தேர்தலிலும் இதே வாக்குகளை பெற்று தி.மு.க. ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா, எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இலக்கிய அணி இணை செயலாளர் வி.பி.கலைராஜன் செய்திருந்தார்.

Next Story