தமிழகத்தில் ரூ.36 கோடியில் காவலர் குடியிருப்புகள், தீயணைப்பு நிலைய கட்டிடங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்


தமிழகத்தில் ரூ.36 கோடியில் காவலர் குடியிருப்புகள், தீயணைப்பு நிலைய கட்டிடங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 7 Jan 2020 5:15 AM IST (Updated: 7 Jan 2020 3:37 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ரூ.36 கோடியில் காவலர் குடியிருப்புகள், மாவட்ட காவல் அலுவலகம், தீயணைப்பு நிலைய கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழக அரசு வனத்துறையில் காலியாக உள்ள 564 வனக்காவலர்கள் பணியிடங்களுக்கு தமிழ்நாடு வனச்சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.

இதில் பணி ஆணை வழங்கும் அடையாளமாக, 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.

உள்துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் அரியலூரில் ரூ.7 கோடியே 35 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட காவல் அலுவலக கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், ரூ.28 கோடியே 77 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 50 காவலர் குடியிருப்புகள், 7 காவல் நிலையங்கள், 5 காவல்துறை இதர கட்டிடங்கள், 3 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டிடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்கான 55 குடியிருப்புகள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

பள்ளி கல்வித்துறை சார்பில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் அமராவதி நகரில் ரூ.9 கோடியே 87 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ‘சைனிக்’ இளநிலை மாணவர்கள் விடுதிக் கட்டிடத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும், ரூ.86 கோடியே 7 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 42 பள்ளிக் கட்டிடங்கள், 3 ஒன்றிய ஆசிரியர் கல்வி நிறுவனக் கட்டிடங்கள் மற்றும் ஒரு ஆசிரியர் இல்ல கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) மதுபான சில்லறை விற்பனை கடைகளில் உபரி பணியாளர்களாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் இளநிலை உதவியாளர் நிலையில் காலியாக உள்ள பணியிடத்துக்கு சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டு 491 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 7 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story