இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை: ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் - தமிழக சட்டசபையில் கவர்னர் உரை


இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை: ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் - தமிழக சட்டசபையில் கவர்னர் உரை
x
தினத்தந்தி 7 Jan 2020 5:45 AM IST (Updated: 7 Jan 2020 3:56 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபையில் உரை நிகழ்த்திய கவர்னர், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த முடியும் என்று கூறினார். அத்துடன், இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

சென்னை,

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. இதற்காக, கவர்னர் பன்வாரிலால் புரோகித் காலை 9.50 மணி அளவில் தலைமைச் செயலக வளாகத்திற்கு வந்தார். அவரை சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர், அவரை சட்ட சபை கூட்ட அரங்கத்திற்கு அழைத்து வந்தனர்.

சட்டசபை கூட்ட அரங்கத்திற்கு காலை 9.59 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தபடி வந்தார். சரியாக காலை 10 மணி அளவில் சபாநாயகர் இருக்கைக்கு அவர் வந்தார். அவருக்கு வலதுபுறத்தில் சபாநாயகர் ப.தனபாலுக்கும், இடதுபுறத்தில் கவர்னரின் செயலாளர் ஆனந்த் ராவ் விஷ்ணு பாட்டிலுக்கும் இருக்கை போடப்பட்டிருந்தது. அனைவரும் இருக்கைக்கு வந்தவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

அதன்பிறகு, காலை 10.01 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்த தொடங்கினார். முதலில், சில வார்த்தைகள் தமிழில் பேசினார். “அனைவருக்கும் காலை வணக்கம். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்” என்றார். அதன் பிறகு அவர் ஆங்கிலத்தில் பேச முற்பட்டபோது, எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேச முயன்றார். அவருக்கு மைக் இணைப்பு வழங்குமாறு தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் எழுந்து குரல் கொடுத்தனர்.

அப்போது கவர்னர் பன்வாரிலால் புரோகித் குறுக்கிட்டு, “ஒரு நிமிடம் பொறுங்கள். 2 வருடங்களாக நான் உங்களை பார்க்கிறேன். நன்றாக பேசி வருகிறீர்கள். இது விவாதம் அல்ல. உங்களுக்கு பேச நிறைய வாய்ப்பு இருக்கிறது. விவாதத்திற்கான நேரத்தில் உங்களுடைய கருத்துகளை தெரிவியுங்கள்” என்றார்.

ஆனால், தி.மு.க. உறுப்பினர்கள் கவர்னரின் பேச்சை புறக்கணித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 10.03 மணிக்கு அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களுடன் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினரும், சுயேச்சை உறுப் பினர் டி.டி.வி.தினகரனும் வெளிநடப்பு செய்தனர்.

இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் முகமது அபுபக்கர், மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர் தமிமுன் அன்சாரி ஆகியோர் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். தமிமுன் அன்சாரி, தேசிய கொடியை காட்டி தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

பின்னர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளியே சென்ற பிறகு, காலை 10.04 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது உரையை ஆங்கிலத்தில் தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைவருக்குமான பொது வினியோக திட்டம், பிற மாநிலங்களும் தொடர்ந்து பின்பற்றுவதற்கான முன்மாதிரியாக அமைந்துள்ளது. முழுமையாக கணினி மயமாக்கப்பட்டு, ஆதாருடன் இணைக்கப்பட்ட பொது வினியோக அமைப்பு நடைமுறைகளினால், ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தை தமிழ்நாடு அரசால் நடைமுறைப் படுத்த முடிகிறது.

பல்வேறு தடைகள் வந்தபோதிலும், 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் முறையாக நடத்தப்படுவதை இந்த அரசு உறுதி செய்தது. மீதமுள்ள 9 மாவட்டங்களிலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரைவாக தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. இந்த செயல்பாடு, மக்களாட்சியைப் பரவலாக்குவதில் இந்த அரசுக்கு உள்ள முனைப்பினை எடுத்துக்காட்டுகிறது.

மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டிற்கு உதவி செய்ய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ள நிலையில், ரூ.563.50 கோடி மதிப்பீட்டில் அதற்கான திட்டம் தீட்டப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான அனுமதியை விரைவாக வழங்கிட மத்திய அரசினை நான் கேட்டுக்கொள்கிறேன்.

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு மத்திய அரசினை வலியுறுத்தும். தமிழக மக்கள், எந்த ஒரு மதத்தையோ அல்லது சமயத்தையோ பின்பற்றினாலும், அவர்கள் அனைவரின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும்.

தமிழ்நாட்டிற்குள் பாய்கின்ற நதிகளை இணைக்கும் பணியை மேற்கொள்ளும் விதமாக, காவிரி - குண்டாறு ஆறுகள் இணைப்பு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தும். இதில் முதல் கட்டமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னரே அறிவித்தவாறு, காவிரி - தெற்கு வெள்ளாறு இணைப்பு திட்டம் வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும்.

கால்நடை துறைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், சேலம் மாவட்டம் தலைவாசலில், ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் கால்நடை அறிவியல் ஆராய்ச்சிக்கான மேம்பட்ட ஒருங்கிணைந்த கல்வி நிறுவனம் மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரிக்கு முதல்-அமைச்சர் விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளார்.

மூக்கையூர் மற்றும் குந்துக்கல்லில் முறையே ரூ.120 கோடி மற்றும் ரூ.100 கோடி மதிப்பீட்டிலான மீன்பிடி துறைமுகங்கள் கட்டும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வெள்ளப்பள்ளத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் ஒரு மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட உள்ளது.

திருவொற்றியூர் குப்பம், தரங்கம்பாடி மற்றும் முதுநகரில் ரூ.420 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகங்களை அமைப்பதற்கு மத்திய அரசு மற்றும் நபார்டு வங்கியிடம் இருந்து இசைவு பெறப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் அனைத்தும், மாநிலத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்பை மேலும் ஊக்குவிக்கும்.

டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்க, முதல்-அமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளபடி, பாதிப்பிற்கு உள்ளாகக்கூடிய பகுதிகளில் உள்ள அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் விலையில்லா கொசுவலைகள் வினியோகிக்கப்படும்.

இந்த அரசு திறமையான நிதி மேலாண்மைக்கு அதிமுக்கியத்துவம் அளித்து வருகிறது. பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், நிதிநிலை வரம்புகள் மீறாமல் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதி குறைந்துள்ளது. மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டை, 14-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் அதிகரித்து தந்துள்ளன என்ற பரவலான கருத்து உள்ள நிலையில், மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படும் மொத்த நிதியளவு குறைந்துள்ளது என்பதே உண்மை நிலவரமாகும்.

மேலும், 14-வது நிதிக்குழு பரிந்துரைத்த, மாநிலங்களுக்கு இடையிலான மத்திய வரிகளின் பகிர்வு வழிமுறை தமிழ்நாட்டிற்கு மேலும் அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

14-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளை தமிழ்நாடு மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது. இந்த அரசு, நிதிக்குழு முன்பு தனது கருத்துகளை விளக்கமாக சமர்ப்பித்துள்ள நிலையில், மாநில அரசுகளின் செயல்திறனையும், செயல்பாட்டையும் ஊக்குவிக்கும் வகையில், நியாயமான மற்றும் சமமான நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற நம்பிக்கையுடன் உள்ளது.

தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு, இதுவரை பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) இழப்பீடாக ரூ.7,096 கோடியை பெற்றுள்ளது. மேலும், மத்திய அரசின் மானியமான ரூ.17,957.31 கோடி இந்த ஆண்டில் இதுவரை பெறப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழ்நாட்டிற்கான நிலுவை தொகைகளை விடுவிப்பதில் நிலவி வரும் சில சிக்கல்களை களைந்து நிலுவை தொகையினை பெற தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

2017-2018-ம் ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் வசூலிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொருட்கள் மற்றும் சேவை வரியை நடைமுறைப்படுத்திய 2017-2018-ம் ஆண்டில், பல்வேறு மாநிலங்களில் வசூலிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொருட்கள் மற்றும் சேவை வரியில், ஒதுக்கீடு செய்யப்படாத தொகையான ரூ.88,344.22 கோடியில் இருந்து 50 சதவீதத்தை, மாநில பொருட்கள் மற்றும் சேவை வரி வசூல் அடிப்படையில் வழங்குவதற்கு பதிலாக, மத்திய அரசு தனது தொகுப்பு நிதிக்கு தவறுதலாக எடுத்துச் சென்றுவிட்டது.

மேலும், 14-வது நிதிக் குழுவின் நிதிப்பகிர்வு முறையின்படி, இத்தொகையில் 42 சதவீதம் மட்டுமே மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டது. இதன் விளைவாக தமிழ்நாட்டிற்கு ரூ.4,073 கோடி நிகர இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலுவை தொகையை நமது மாநிலத்திற்கு விரைவாக விடுவிக்குமாறு மத்திய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.

தமிழ்நாடு அரசுக்கு வர வேண்டிய நிலுவைத்தொகைகளை விரைவில் விடுவிக்குமாறு மத்திய அரசை மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.

கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சை நிறைவு செய்யும்போது, தனது உரையை சபாநாயகர் ப.தனபால் தமிழில் வாசிப்பார் என்று கூறியதுடன், “தமிழ் இனிமையான மொழி. அனைவருக்கும் வணக்கம். ஜெய்ஹிந்த்” என்று தமிழில் கூறினர்.

அதன் பிறகு, அவரது உரையை தமிழில் காலை 11.01 மணிக்கு சபாநாயகர் ப.தனபால் வாசிக்க தொடங்கினார். அவர் தனது பேச்சை 11.56 மணிக்கு நிறைவு செய்தார். அதன்பின்னர், நாட்டுப்பண் இசைக்க முதல் நாள் கூட்டம் நிறைவடைந்தது.

Next Story