சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு தடை


சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு தடை
x
தினத்தந்தி 7 Jan 2020 1:38 PM IST (Updated: 7 Jan 2020 1:38 PM IST)
t-max-icont-min-icon

சபையில் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

சென்னை

தமிழக சட்டசபையில் ஆண்டின் முதல் கூட்டம் நேற்று தொடங்கியது. இன்று  குடியுரிமை சட்டதிருத்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இருந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் இன்றும் 2-வது நாளாக  வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் சபைக்குள் வந்தனர். மீண்டும் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

கேரளா போல் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற  வேண்டும் என துரைமுருகன் பேசினார். பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும்போது ஏன் எதிர்க்கவில்லை? என அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பினார்.

பாஜக கூட்டணியில் இருந்தபோது குடியுரிமை சட்டம் திருத்தப்படவில்லை என துரைமுருகன் பதில் அளித்தார். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, அபுபக்கர் கோஷம் எழுப்பியதால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.

சிறுபான்மையினருக்கு ஆதரவாக உள்ளதாக கூறும் அதிமுக, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது ஏன்? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

அதிமுகவால் ஒரு சிறுபான்மையினராவது பாதிக்கப்பட்டு உள்ளதாக சுட்டிக்காட்ட முடியுமா என அமைச்சர் உதயகுமார் கேட்டார்.

துரைமுருகன் பேசும்போது, குடியுரிமை சட்டத்தை எதிர்க்கவில்லை, திருத்தத்தையே எதிர்க்கிறோம் என கூறினார்.

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதத்தில் அமைச்சர் வேலுமணியை ஒருமையில் பேசியதாக  சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனை வெளியேற்ற அவை முன்னவர் ஒ.பன்னீர்செல்வம் தீர்மானம் கொண்டுவந்ததை தொடர்ந்து ஜெ.அன்பழகன் மன்னிப்பு கோரினார்.

மறப்போம், மன்னிப்போம் என ஒ.பன்னீர்செல்வம் கூறியதால்  வெளியேற்றத்தை சபாநாயகர் கைவிட்டார்.

மு.க.ஸ்டாலின் பேசும்போது, அமைச்சர் வேலுமணி குறித்து திமுக எம்.எல்.ஏ அன்பழகன் பேசியது தவறு வருத்தப்படுகிறேன். அதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன். ஆனால் அதே வார்த்தையைத்தான் அமைச்சர் பேசினார். அதற்கு சபாநாயகர் என்ன பதில் அளிப்பார் என்றார்.

அமைச்சர் வேலுமணி குறித்து நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டதால்  ஸ்டாலின் மன்னிப்பு கேட்டதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என ஜெ.அன்பழகன் கூறினார்.

முதல் அமைச்சர்  எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ஒரே ஒருவர்தான் பிரச்சினைக்கு உரியவர் அவர்தான் ஜெ.அன்பழகன். அவர் எப்போது பேசினாலும் அவையில் பிரச்சினை ஏற்படுகிறது என கூறினார்.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கொண்டுவந்த  தீர்மானத்தை தொடர்ந்து அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட திமுக எம்.எல்.ஏ சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும்  பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

Next Story