முதல்வர் பழனிசாமியை சந்தித்து மனு அளித்த இஸ்லாமிய அமைப்பினர்!

குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்பினர் முதல்வர் பழனிசாமியிடம் மனு அளித்தனர்.
சென்னை
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இஸ்லாமிய அமைப்பினர் மாணவர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது, தேசிய குடியுரிமை பதிவேட்டை புறக்கணிக்க வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி 23 இஸ்லாமிய அமைப்பினர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள தமிழக முதலமைச்சர் இல்லத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, இஸ்லாமியர்கள் கூட்டமைப்பினர் சந்தித்து மனு அளித்தனர்.
இக்குழுவினருடன் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கஃபில், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான அன்வர் ராஜா, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது அபுபக்கர், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.
குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து இஸ்லாமிய மக்களிடையே மிகுந்த அச்சம் உள்ளதால் தமிழகத்தில் அமல்படுத்த கூடாது என முதல்வரிடம் இக்கூட்டமைப்பினர் எடுத்துரைத்தனர்.
Related Tags :
Next Story