சிவப்பு பாதரசம் எனக்கூறி மோசடி முயற்சி: முன்னாள் ராணுவ வீரர், சித்தா டாக்டர் உள்பட 5 பேர் கைது
சேலத்தில் சிவப்பு பாதரசம் எனக்கூறி மோசடி செய்ய முயன்ற முன்னாள் ராணுவ வீரர், சித்தா டாக்டர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சூரமங்கலம்,
சேலம் சூரமங்கலம் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிவப்பு பாதரசம் (ரெட் மெர்குரி) என்ற தனிமத்தை விற்பனை செய்ய ஒரு கும்பல் முகாமிட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார், குரங்குசாவடியில் உள்ள ஒரு காபி பாரில் இருந்த 5 பேர் கும்பலை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி பாண்டியராஜன் (வயது 24), விழுப்புரம் மாவட்டம் அய்யந்தூரை சேர்ந்த ரமேஷ் (30), நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த சித்தா டாக்டர் கண்ணதாசன் (45), மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் தங்கபாண்டியன் (44), நாகை மாவட்டம் பூசாரிகோட்டையை சேர்ந்த புருசோத்தமன் (35) என தெரியவந்தது.
அவர்கள் சிவப்பு பாதரசம் எனக்கூறி மோசடி செய்ய முயன்றது தெரியவந்ததால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து சேலம் மாநகர துணை போலீஸ் கமிஷனர் செந்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலத்தில் சிவப்பு பாதரசம் மூலம் நூதன மோசடியில் பணம் பறிக்க ஒரு கும்பல் முகாமிட்டு இருந்தது. புற்றுநோய் உள்ளிட்ட மிக அரிதான நோய்களுக்கு மருந்து தயாரிக்கவும், அபாயகரமான ஆயுதங்கள் தயாரிக்கவும் சிவப்பு பாதரசம் பயன்படுகிறது என சிலரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனை கள்ளச்சந்தையில் தயாரித்து விற்றால் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் கிடைக்கும் என்று கூறி, போலியான சிவப்பு பாதரசத்தை தயாரித்து, அதை வியாபாரிகளை வரவழைத்து விற்பதற்காக சேலத்தில் முகாமிட்டு இருந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததால் 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்து விசாரணை நடத்தினோம்.
விசாரணையில், அவர்கள் வெள்ளை பாதரசத்தில் சிவப்பு சாயத்தை கலந்து போலியாக சிவப்பு பாதரசத்தை தயார் செய்துள்ளனர். தொடர்ந்து ஒரு மி.லி. சிவப்பு பாதரசத்தை ரூ.3 கோடிக்கு விற்கலாம் என வியாபாரிகளிடம் தெரிவித்து ஏமாற்ற முடிவு செய்துள்ளனர். அதற்குள் நாங்கள் அவர்கள் 5 பேரையும் கைது செய்து விட்டோம். சிவப்பு பாதரசம் வெளிச்சந்தையில் விற்கப்படுவதாக எந்த தகவலும் இல்லை. இந்த மாதிரியான கும்பலிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story