வறுமையை ஒழித்தால் தான் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தை பிடிக்க முடியும்; வெங்கையா நாயுடு பேச்சு
வறுமையை ஒழித்தால் தான் இந்தியா உலக பொருளாதாரத்தில் 3-வது இடத்தை பிடிக்க முடியும் என்று திருச்சி கல்லூரி விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.
திருச்சி,
திருச்சி தேசிய கல்லூரியின் நூற்றாண்டு தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நூற்றாண்டு விழா நினைவு தூண் கல்வெட்டினை திறந்துவைத்தார். மேலும் நூற்றாண்டு விழா நினைவு தபால் உறையினை அவர் வெளியிட்டார்.
பல்கலைக்கழக அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு வெங்கையா நாயுடு சான்றிதழ் களை வழங்கி பேசியதாவது:-
இந்திய அளவில் உயர் கல்வியின் வளர்ச்சியானது 26 சதவீத அளவில் உள்ளது. தமிழகம் உயர்கல்வியில் 46.9 சதவீத அளவிற்கு வளர்ச்சி பெற்று முதலிடத்தில் இருக்கிறது. ஆனாலும் உலகில் உள்ள 500 பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் 300 இடங்களுக்குள் இந்தியாவை சேர்ந்த ஒரு பல்கலைக்கழகம் கூட இடம்பெறவில்லை.
நமது நாட்டில் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். உள்ளிட்ட பல உயர்கல்வி நிறுவனங்கள் இருந்தும் உலக தரவரிசை பட்டியலில் நாம் இடம் பெறமுடியாமல் போவது ஏன்? நமது மாணவர்கள் நிறைய படித்து, எவ்வளவு அதிகமாக சம்பாதித்தாலும் பெற்ற தாய், பிறந்த தாய்நாடு, தாய்மொழியை ஒரு போதும் மறந்து விடக்கூடாது. அனைத்து மாநிலங்களிலும் அதிகாரிகள் அவர்களது தாய்மொழியிலேயே பேசவேண்டும்.
இந்தி தெரிந்ததால் நாடு முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்து பேச முடிகிறது. எந்த மொழியையும் திணிக்கக்கூடாது, அதே நேரத்தில் எதிர்க்கவும் கூடாது. இந்தியாவின் எதிர்காலம் திறன்மிக்க பொதுத்துறை-தனியார் ஒத்துழைப்பில் தான் இருக்கிறது. இதன்மூலம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 6 சதவீதம் அளவிற்கு உயரும்.
2022-ம் ஆண்டு இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார உயர்வை அடைய வேண்டும் என்பது நமது இலக்காகும். வறுமை ஒழிக்கப்பட்டால்தான் இந்தியா உலக பொருளாதாரத்தில் 3-வது இடத்தை பிடிக்க முடியும். மாணவர்கள் துரித உணவுகளை தவிர்த்து யோகா, உடற்பயிற்சிகளை செய்யவேண்டும். இளைஞர்கள் முழு உடல் தகுதியுடன் இருந்தால் தான் எதிர்கால இந்தியாவும் முழு வளர்ச்சி அடையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story