போலீசாருக்கு தற்காப்பு உபகரணங்கள் தேவை; சரத்குமார் வலியுறுத்தல்


போலீசாருக்கு தற்காப்பு உபகரணங்கள் தேவை; சரத்குமார் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Jan 2020 11:26 PM GMT (Updated: 11 Jan 2020 11:26 PM GMT)

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலின்போது ஏற்பட்ட பிரச்சினையில், துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் அரிவாளால் தாக்கப்பட்டிருப்பதும், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டிருப்பதும் போலீசாரின் சுயபாதுகாப்பு குறித்த கவனத்தை அதிகரித்திருக்கிறது.

நாள்தோறும் குற்றவாளிகளுடன் பல்வேறு சிக்கலான சூழ்நிலைகளையும், சவால்களையும் எதிர்கொள்ளும் போலீசாருக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது மிகுந்த அவசியம். மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப போலீசாரின் எண்ணிக்கையை உயர்த்துவதுடன், அவர்களின் சுய பாதுகாப்புக்காக நிதி ஒதுக்கீட்டை அரசு அதிகரிக்க வேண்டும். மேம்பட்ட தற்காப்பு உபகரணங்களும், பாதுகாப்பு கருவிகளும் ஒவ்வொரு போலீஸ்காரர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

குறிப்பாக பிற மாநிலங்களுடனான தமிழக எல்லைகள், சோதனைச்சாவடிகள், ஏற்கனவே அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கக்கூடிய பதற்றமான பகுதிகளாக கருதப்படும் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கிட வேண்டும். போலீஸ் அதிகாரிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு வலிமையாக கட்டமைத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story