“சப்-இன்ஸ்பெக்டர் மரணத்திலும் அரசியல் செய்கிறார்” மு.க.ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு


“சப்-இன்ஸ்பெக்டர் மரணத்திலும் அரசியல் செய்கிறார்” மு.க.ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு
x
தினத்தந்தி 13 Jan 2020 5:30 AM IST (Updated: 13 Jan 2020 2:00 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் மரணத்திலும் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கடுமையாக தாக்கியுள்ளார்.

சென்னை,

கடந்த 8-1-2020 அன்று இரவு, கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச்சாவடி பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இவ்வழக்கில், தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விசாரணை மேற்கொண்டதுடன், முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் காவல்துறை இயக்குனரே நேரில் சென்றும் விசாரணை மேற்கொண்டார். அது மட்டுமின்றி, 8-1-2020 அன்று இரவு நடந்த இச்சம்பவம் தொடர்பாக மறுநாளே 9-1-2020 அன்று சட்டப்பேரவையிலேயே முதல்-அமைச்சர் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும், குடும்பத்தாருக்கு தக்க நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி, மறுநாள் 10-1-2020 அன்று நிவாரணமாக ரூ.1 கோடி வழங்கியும் உத்தரவிட்டார்.

மரணத்திலும் அரசியல்

இது இவ்வாறிருக்க, சம்பவம் குறித்து 2 நாட்களாக ஒரு அனுதாபம் கூட தெரிவிக்காமல், நேரடியாகச் சென்று பெயரளவில் ரூ.5 லட்சத்தை அக்குடும்பத்தினருக்கு வழங்கிவிட்டு, “காவல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பில்லை; இதில் தான் தமிழ்நாடு முதலிடம்” என்று டுவிட்டரில் பதிவிட்டு, ஒரு காவல் அலுவலரின் மரணத்திலும் அரசியல் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்டுள்ளார் தி.மு.க. தலைவர்.

யாருடைய ஆட்சியில் காவல் துறையினருக்கு நல்லது நடக்கிறது என்பதும், யாருடைய ஆட்சியில் காவல் துறையினரை கண்டுகொள்ளவே இல்லை என்பதும், காவல்துறையினருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்கு தெரியும், அதுபற்றி தி.மு.க. தலைவர் எடுத்துரைக்க வேண்டிய அவசியமே இல்லை.

வெற்றிவேல் மரணம்

தி.மு.க. ஆட்சியில், 7-1-2010 அன்று பிற்பகல் 2 மணியளவில் திருநெல்வேலி மாவட்டம், தென்காசி - அம்பாசமுத்திரம் சாலையில், அப்போதைய தி.மு.க. அமைச்சர்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் கண்ணெதிரே வழியில் கூலிப்படையினரால் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டப்பட்டும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் வெற்றிவேலின் உயிரைக் காப்பாற்ற முனையாமல், அவர் தண்ணீர் கேட்டதைக் கூட செவிசாய்க்காமல் வேடிக்கை பார்த்ததை தொலைக்காட்சிகள் வாயிலாக மக்கள் அனைவரும் பார்த்தார்கள்.

பின்னர், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, உயிரிழந்தார். ஆனால், இன்றைய தினம் சாதாரணமாக விபத்தில் அடிபட்டு காயமடைந்தவர்களைக்கூட நமது அமைச்சர்கள் தங்களது காரிலேயே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் சம்பவமும் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

செல்வி வீட்டு பணிப்பெண்

29-8-1997 அன்று மதுரை மத்திய சிறையில் பணிபுரிந்து வந்த ஜெயிலர் ஜெயப்பிரகாஷ் அலுவலகம் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். அதேபோல, 17-11-1999 அன்று சென்னை மத்திய சிறைச்சாலையில் சிறைத்துறை அதிகாரிகள் மீது தண்டனைக் கைதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் துணை சிறைத்துறை அதிகாரி ஜெயக்குமார் அடித்துக் கொல்லப்பட்டார். சிறைத்துறையில் ஒரு அதிகாரியை அடித்துக் கொல்லும் அளவுக்கு ஆயுதங்கள் எவ்வாறு உள்ளே சென்றது என்பது கூட தெரியாமல் அப்போதைய தி.மு.க. அரசு இருந்துள்ளது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 24-8-2011 அன்று காவல்துறை மானியக் கோரிக்கைக்கு பதில் அளிக்கும்போது, மத்திய சென்னை பகுதியில் நள்ளிரவு 2 மணியளவில் வாலிபர் குடித்துவிட்டு ரகளை செய்து கொண்டிருந்தபோது, பெண் எஸ்.ஐ. அந்த வாலிபரை கைது செய்து ஜீப்பில் ஏற்றினார். அப்போது அங்கு வந்த ஒரு பெண், உதவி பெண் ஆய்வாளரின் கையைப் பிடித்து கீழே இறக்கி, கன்னத்தில் அறைந்தார். “என்னடி நெனச்சிக்கிட்டு இருக்கே, என் பிள்ளையையா நீ கைது செய்ற, யாரடி நீ” என்று கேட்டு, தன் பையனைக் கையைப் பிடித்து வண்டியைவிட்டு இறக்கி அழைத்துக் கொண்டு போய்விட்டார் என்று ஜெயலலிதா விளக்கமாகக் கூறினார். அந்த பெண் உதவி ஆய்வாளரால் எதுவும் செய்ய இயலவில்லை, காரணம், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மகள் செல்வியின் வீட்டு பணியாள் தான், ரகளை செய்த அந்த வாலிபரின் தாய்.

இவ்வாறு தி.மு.க. ஆட்சியின்போது காவல் துறையினர் பட்ட இன்னல்களைப் பற்றி பல்வேறு உதாரணங்களை கூறிக்கொண்டே போகலாம். இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து, தி.மு.க. தலைவர் டுவிட்டரில் இட்டுள்ள பதிவு, மக்கள் சிரிக்கத்தான் வகை செய்யும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story