விருது பெறுபவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்வு அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ் அறிஞர்கள் பெருமைப்படுத்தப்படுகிறார்கள் எடப்பாடி பழனிசாமி பேச்சு

அ.தி.மு.க. ஆட்சியில் தமிழர் அறிஞர்கள் பெருமைப்படுத்தப்படுகிறார்கள் என்றும், விருது பெறுகிறவர்களின் எண்ணிக்கை 5-ல் இருந்து 72 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சென்னை,
திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் கலை அரங்கில் நேற்று நடந்தது. விழாவிற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் வரவேற்று பேசினார்.
விழாவில் திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர் விருதுகள் மற்றும் சிறப்பு மொழி பெயர்ப்பாளர்கள் விருது, உலக தமிழ் சங்க விருது, கலைப்பண்பாட்டு துறை கலைச்செம்மல் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்ற 45 பேருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார். அவர்களுக்கு விருதுகள் மற்றும் ரொக்க பணத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்களுக்காக 7 தமிழ் அறிஞர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும் முதல்-அமைச்சர் வழங்கினார்.
விருது பெற்றவர்களின் விவரம் வருமாறு:-
2020-ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது- ந.நித்தியானந்தபாரதி, 2019-ம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது- செஞ்சி ந.ராமச்சந்திரன், அம்பேத்கர் விருது- க.அருச்சுனன், அண்ணா விருது- கோ.சமரசம், பெருந்தலைவர் காமராஜர் விருது- மதிவாணன், மகாகவி பாரதியார் விருது- பேராசிரியர் ப.சிவராஜி, பாவேந்தர் பாரதிதாசன் விருது- த.தேனிசை செல்லப்பா, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது- சே.சுந்தரராஜன், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது- மணிமேகலை கண்ணன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
தமிழ்த்தாய் விருது
தமிழ்த்தாய் விருது சிகாகோ தமிழ்ச் சங்கம் நம்பி, மணி ஆகியோருக்கு வழங்கப்பட்டு ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. கபிலர் விருது- புலவர் வெற்றியழகன், உ.வே.சா.விருது- வே.மகாதேவன், கம்பர் விருது- சரஸ்வதி ராமநாதன், சொல்லின் செல்வர் விருது- சிந்தனைக் கவிஞர் முனைவர் கவிதாசன், உமறுப்புலவர் விருது- லியாகத் அலிகான், ஜி.யு.போப் விருது- மரிய ஜோசப் சேவியர், இளங்கோவடிகள் விருது- கவிக்கோ ஞானச்செல்வன் என்ற கோ.திருஞானசம்பந்தம், அம்மா இலக்கிய விருது- உமையாள் முத்து, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் விருது- அசோகா சுப்பிரமணியன் என்ற சோ.கா.சுப்ரமணியன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
மறைமலையடிகளார் விருது- ப.முத்துக்குமாரசுவாமி, அயோத்திதாசப் பண்டிதர் விருது- புலவர் வே.பிரபாகரன், முதல்-அமைச்சர் கணினித் தமிழ் விருது- முனைவர் த.நாகராஜன் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் காசோலை மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது.
சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் விருது- சா.முகம்மது யூசுப், மஸ்தான் அலி, சிவ.முருகேசன், மரபின் மைந்தன் (முத்தையா), வத்சலா, முருகுதுரை, மாலன் என்ற வே.நாராயணன், கிருசாங்கினி என்ற பிருந்தா நாகராஜன், அ.மதிவாணன் ஆகியோர் பெற்றனர். இவர்களுக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
மொழியியல் விருது
உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது மலேசிய நாட்டைச் சேர்ந்த பெ.ராஜேந்திரன், இலக்கண விருது பிரான்சு நாட்டைச் சேர்ந்த முத்து கஸ்தூரிபாய், மொழியியல் விருது இலங்கை நாட்டைச் சேர்ந்த சுபதினி ரமேஷ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் காசோலை வழங்கப்பட்டது.
மரபுவழி கலை வல்லுனர் விருது கணபதி ஸ்தலபதி, ராமஜெயம், தமிழ் அரசி, கீர்த்தி வர்மன், கோபாலன் ஸ்தலபதி ஆகியோர் பெற்றனர். நவீனபாணி கலை வல்லுனர் விருது எஸ்.பி.நந்தன், கோபிநாத், ஆனந்த நாராயணன், நாகராஜன், டக்ளஸ், ஜெயக்குமார் பெற்றனர். இவர்களுக்கு கலைச்செம்மல் விருதும், ரூ.50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டது.
நூல் நாட்டுடமை ஆக்கப்பட்டதற்கான பரிவு தொகை தலா ரூ.5 லட்சத்தை தமிழ் அறிஞர்கள் சண்முகம், கவிஞர் நா.காமராசன், இரா.இளவரசு, அடிகளாசிரியர், புலவர் இறைகுருவனார், பண்டித மா.கோபாலகிருஷ்ணன், பாபநாசம் குறள்பித்தன் ஆகியோரின் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.
மாணவர்களுக்கு பயன்
விருதுகளை வழங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
உலகில் உள்ள தொன்மையான மொழிகளில் ஏட்டளவிலும், பேச்சளவிலும் இன்றைக்கும் நிலைத்து வாழும் மொழி, தமிழ்மொழி. இத்தகைய பெருமை வாய்ந்த தமிழ் மொழியின் தலை சிறந்த நூலான திருக்குறளை உலகுக்கு அருளியவர் திருவள்ளுவர்.
திருவள்ளுவரின் பெருமையினை உலகறியச் செய்யும் வகையில், ஆண்டுதோறும் தை 2-ம் நாளை திருவள்ளுவர் தினமாக தமிழ்நாடு அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது. தமிழுக்கு பெருமை சேர்த்திடும் வகையில், தம் வாழ்நாளில் தமிழ்ப் பணியாற்றி வருவதையே உயிர் மூச்சாகக் கொண்டுள்ள தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. திருக்குறளை கற்றுத்தெளிவதை விட, காட்சியில் கண்டால் எளிதில் மனதில் பதியும் என்பதால், ஜெயலலிதாவின் உத்தரவுபடி அரசு நிதி உதவியில் திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடம் சென்னை, தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை நாள்தோறும் மாணாக்கர்கள் மற்றும் வெளிநாட்டினர் கண்டு பயனடைந்து வருகின்றனர்.
72 ஆக உயர்வு
அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழ்நாடு அரசின் சார்பில் 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் பங்குத் தொகையாக 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அ.தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வரும்போது எல்லாம் தமிழ் அறிஞர்களை பெருமைப்படுத்தும் வகையில் அவர்களுக்கு வழங்கப்படும் விருதுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வந்துள்ளது. அந்த வகையில், தமிழ் வளர்ச்சித்துறையில், 5 ஆக இருந்த விருது பெறுபவர்களின் எண்ணிக்கை தற்போது 72 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






