தேனியில் தனக்கு எதிராக கருப்புக்கொடி காட்டியதற்கு ரவீந்திரநாத்குமார் எம்.பி கண்டனம்


தேனியில் தனக்கு எதிராக கருப்புக்கொடி காட்டியதற்கு ரவீந்திரநாத்குமார் எம்.பி கண்டனம்
x
தினத்தந்தி 24 Jan 2020 11:31 AM GMT (Updated: 24 Jan 2020 11:31 AM GMT)

தேனியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனக்கு எதிராக கருப்புக்கொடி காட்டியதற்கு ரவீந்திரநாத்குமார் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேனி,

தேனி மாவட்டம் கம்பம் பார்க் திடலில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்தில் தேனி எம்.பி.யும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்குமார் பங்கேற்பதாக இருந்தது.

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் ரவீந்திரநாத்குமார் எம்.பி. வாக்களித்ததை கண்டித்தும், பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் அவருக்கு முஸ்லிம் அமைப்பினர் கருப்பு கொடி காட்டவும் திட்டமிட்டு இருந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கம்பம் தபால் நிலையம், போக்குவரத்து சிக்னல், பார்க் திடல் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி தலைமையில் பாதுகாப்புக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக் கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்த இடத்துக்கு ரவீந்திரநாத்குமார் எம்.பி. தனது காரில் வந்தார். அவர் காருக்கு பின்னால் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளின் கார்கள் வந்தன.

அப்போது திடீரென சூழ்ந்த முஸ்லிம்கள் சிலர் கையில் கருப்பு கொடியுடன் அங்கு வந்து எம்.பி.யின் காரை முற்றுகையிட்டனர். 

மேலும் எம்.பி.யை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது திடீரென சிலர் அவரது காரை கையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  தொடர்ந்து முஸ்லிம்கள் அங்கு சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து முஸ்லிம்கள் 43 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில்,  அமைதியான தேனி மாவட்டத்தில் அமைதியின்மையை உருவாக்கி, வன்முறையைத் தூண்டுவதற்காக மேற்கண்ட நபர்களால் மேற்கொள்ளப்பட்ட முன்கூட்டியே திட்டமிடப்பட்ட முயற்சிக்கும் மற்றும் உள்நோக்கத்துடன் கூடிய எதிர்மறையான பிரசாரத்திற்கும் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்று ரவீந்திரநாத்குமார் கூறினார். மேலும்  இத்தகைய தவறான பிரசாரம் செய்பவர்களின் வலையில் மக்கள் விழுந்துவிட வேண்டாம் எனவும் ரவீந்திரநாத்குமார்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story