தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சென்னை, நெல்லை, கோவையில் இருந்து பழனிக்கு சிறப்பு பஸ்கள்


தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சென்னை, நெல்லை, கோவையில் இருந்து பழனிக்கு சிறப்பு பஸ்கள்
x
தினத்தந்தி 31 Jan 2020 8:15 PM GMT (Updated: 31 Jan 2020 8:15 PM GMT)

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சென்னை, நெல்லை, கோவையில் இருந்து பழனிக்கு சிறப்பு பஸ்களை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை, 

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் கு.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பழனியில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவினை முன்னிட்டு பக்தர்கள் சென்றுவர ஏதுவாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், ஆண்டுதோறும் சென்னை மற்றும் பிற முக்கிய ஊர்களிலிருந்து பழனிக்கும், தைப்பூசத் திருவிழா முடிவடைந்த பின்னர் பழனியிலிருந்து சென்னை மற்றும் பிற முக்கிய ஊர்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டும், வருகிற 8-ந் தேதி அன்று பழனியில் நடைபெற இருக்கும் தைப்பூசத் திருவிழாவினை முன்னிட்டு, 7-ந் தேதி சென்னையிலிருந்து 15 சிறப்பு பஸ்களும், திருச்சி மற்றும் திண்டுக்கல்லில் இருந்து தலா 5 சிறப்பு பஸ்களும், கோவை மற்றும் மதுரையில் இருந்து தலா 4 சிறப்பு பஸ்களும், சேலத்திலிருந்து 3 சிறப்பு பஸ்களும், காரைக்குடி, நெல்லை, செங்கோட்டை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ஊர்களிலிருந்து தலா ஒரு சிறப்பு பஸ் என மொத்தம் 40 அதிநவீன சொகுசு மிதவை பஸ்கள் பழனிக்கு சிறப்பு பஸ்களாக இயக்கப்பட உள்ளது.

தைப்பூசத் திருவிழா முடிந்த பின்னர், பழனியில் இருந்து 8-ந் தேதி அன்று சென்னை மற்றும் பிற முக்கிய ஊர்களுக்கு 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அரசு போக்குவரத்துக் கழக இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story