தூத்துக்குடி வாக்காளர் தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி ஐகோர்ட்டில் கனிமொழி எம்.பி. மனு


தூத்துக்குடி வாக்காளர் தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி ஐகோர்ட்டில் கனிமொழி எம்.பி. மனு
x
தினத்தந்தி 31 Jan 2020 10:30 PM GMT (Updated: 2020-02-01T01:57:45+05:30)

தன்னுடைய தேர்தல் வெற்றியை எதிர்த்து தூத்துக்குடி வாக்காளர் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் கனிமொழி எம்.பி. மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை, 

நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழி, பா.ஜ.க. சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் போட்டியிட்டனர். இதில் கனிமொழி அதிக ஓட்டுக்களை பெற்று வெற்றிப் பெற்றார்.

இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி தமிழிசை சவுந்தரராஜனும், தூத்துக்குடி தொகுதி வாக்காளர் சந்தானகுமார் ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையில் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா கவர்னராக பதவி ஏற்றதை தொடர்ந்து, அவர் தாக்கல் செய்த தேர்தல் வழக்கு திரும்பப் பெறப்பட்டது.

இதையடுத்து தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதில் கனிமொழிக்கு எதிராக தேர்தல் வழக்கை தொடர அனுமதி கேட்டு தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த வாக்காளர் முத்துராமலிங்கம் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவரது வழக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நிராகரிக்க வேண்டும்

இந்த நிலையில் கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்குகள் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கனிமொழி சார்பில் வக்கீல் ரிச்சர்ட் வில்சன் ஆஜராகி, ‘சந்தானகுமார் தொடர்ந்த வழக்கிற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது’ என்று கூறினார். இதையடுத்து சந்தானகுமாரின் வழக்கின் விசாரணையை தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர், முத்துராமலிங்கம் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று கனிமொழி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘முத்துராமலிங்கம் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எதுவும் இல்லை. எனவே, இவரது தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி முத்துராமலிங்கத்துக்கு உத்தரவிட்டார்.

விசாரணையை வருகிற மார்ச் 4-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

Next Story