பெண் போலீசை திருமணம் செய்து ஏமாற்றிய சப்-இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு சிறை ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் சிறப்பு கோர்ட்டு உத்தரவு

பெண் போலீசை திருமணம் செய்து விட்டு ஏமாற்றிய சப்-இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.
சென்னை,
பெண் போலீசை திருமணம் செய்து விட்டு ஏமாற்றிய சப்-இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண் போலீசுக்கு, சப்-இன்ஸ்பெக்டர் ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா மேலத்தாணியம் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாத்துரை. திருச்சி சிறப்பு காவல் படையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கும், சென்னை ஆயுதப்படையில் பணியாற்றிய பெண் போலீஸ் பாரதிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, 2008-ம் ஆண்டு பழனி முருகன் கோவிலில் வைத்து அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இதன்பின்பு, அவர்கள் கணவன்-மனைவியாக காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் பாரதி தன்னை ஊர் அறிய திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தி உள்ளார். அதற்கு அண்ணாத்துரை, 150 பவுன் நகையும், ரூ.10 லட்சம் ரொக்கமும் வரதட்சணையாக தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து பாரதி, திருமணம் செய்து விட்டு தன்னை ஏமாற்றியதாக சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் கூறினார்.
இந்த புகார் குறித்து திருச்சி சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி, அண்ணாத்துரைக்கு எதிராக சென்னையில் உள்ள வன்கொடுமை தடுப்புப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆர்.செல்வக்குமார் முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் ஏ.சத்யா ஆஜராகி வாதாடினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சப்-இன்ஸ்பெக் டர் ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
Related Tags :
Next Story